ADVERTISEMENT

நள்ளிரவில் அடுத்தடுத்து வீடு புகுந்து கொள்ளை!! அச்சத்தில் கிராம மக்கள்... 

12:37 PM Feb 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலையம் அருகே உள்ளது கொ.குடிக்காடு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மனைவி அங்கம்மாள் வயது 70. இவர் நேற்று முன்தினம் (07.02.2021) நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் கதவைத் திறந்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள், அவர் வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்துப் பார்த்துள்ளனர்.

பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாததால் கோபத்தில் இருந்த கொள்ளையர்கள், அந்த நேரம் பார்த்து வெளியில் சென்ற அங்கம்மாள் வீட்டுக்குள் வந்துள்ளார். அவர் வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் அங்கம்மாளின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு இதுவாவது கிடைத்ததே என்று சந்தோசத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் அந்த மர்ம கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள லட்சுமணபுரம் கிராமத்திற்குள் சென்றுள்ளனர். அங்கு செல்வராணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து 25ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் ராமநத்தம் காவவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரிலிருந்து தசரதன் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.

தொடர் கொள்ளை காரணமாக லட்சுமணபுரம், கொ.குடிக்காடு. பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் எந்த ஊருக்குள் கொள்ளையர்கள் நுழைவார்கள், யார் வீட்டில் நுழைந்து கொள்ளை அடிப்பார்கள், கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதோடு அந்த வீடுகளில் வசிக்கும் மக்களையும் தாக்குவார்களோ, உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்ற பயத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT