ADVERTISEMENT

ஊருணி படித்துறையில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

10:16 PM Sep 26, 2019 | kalaimohan

சிவகங்கை அருகே கோவானூர் ஊருணி படித்துறையில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ.விமல்ராஜ் ஆகியோர் கோவானூர் ஊருணி படித்துறையில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளைக் களஆய்வின்போது கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

ADVERTISEMENT

ஊரணி படித்துறை சிவகங்கையிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது கோவானூர். இவ்வூரின் முகப்பில் ஒரு ஊருணி உள்ளது. இதன் கிழக்குக்கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக்காலும் உள்ளன. இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் இடிந்துபோன கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டதாக உள்ளன. இத்தகைய கற்கள் இவ்வூரின் பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன.

இதில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழமையான 6 துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டுகள். இவற்றின் மூலம் இவ்வூரில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. அழிந்துபோன அந்த சிவன் கோயில் கற்களைப் பயன்படுத்தி படித்துறை கட்டியுள்ளனர். கல்வெட்டு செய்தி கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி ‘பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்’ எனத் தொடங்கும். இங்குள்ள ஒரு கல்வெட்டில் அம்மெய்க்கீர்த்தியின் 9 வரிகள் உள்ளன. இதில் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும் , மண்டபமும் இடித்தது ஆகிய தகவல்கள் உள்ளன.

இவ்வூர் சிவன் கோயிலுக்கு இறையிலி தேவதானமாக இரு ஊர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊர்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு வேலி இருமா அளவுள்ள நிலம் நீக்கி மீதமுள்ள பகுதி தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பறை வரி, கடமை வரி ஆகிய வரிகள் மற்றும் பாண்டீஸ்வரமுடையார் எனும் கோயிலைச் சேர்ந்த சிவபிராமணர் பற்றியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது. இக்கல்வெட்டுகளில் அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் மூன்று புரவரி திணைக்கள நாயகம் மற்றும் உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன் விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வூர் முருகன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் இவ்வூர் கீரனூர் நாட்டில் இருந்தாக அறியமுடிகிறது. கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நிலஅளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. இதில் ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் வருகிறது.

மேலும் இவ்வூர் பொட்டலில் சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. அங்கு கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. இதை காளி என வழிபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT