Skip to main content

கீழடியை போல பனங்குடியில் பழமையான கழிவுநீர்க் குழாய் கண்டுபிடிப்பு

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Discovery of ancient sewage pipe in Panangudi like Keezhadi

 

சிவகங்கை மாவட்டத்தில் பழமையான  தொல்லெச்சங்கள் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், பனங்குடிப் பகுதியில் பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ஓடுகள் கிடைப்பதாக பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார்,பாண்டியன் இளங்கோ, முத்தரசு ஆகியோர்  சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர் இரா.நரசிம்மன் துணைச் செயலாளர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில்  மேற்பரப்புக்கள ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா  செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, 'பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய்க் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்பணியின் பின்பு அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் பொழுது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர்கள் பெரியவர்களிடம் காண்பித்துள்ளனர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஊர்க்காரர்கள் இது ஏதாவது பழமையான ஓடாக இருக்கும் என்ற அளவில் விட்டுவிட்டனர். இந்நிலையில் நாங்கள் அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம். இங்கு காணப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு ஒன்றின் மேல்  ஒன்றாக  கோர்வையாக அடுக்கி படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பாக ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது. இதுபோன்ற கழிவுநீர்க் குழாய் அமைப்புகள் சிந்துச் சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க் குழாய்கள் காணக் கிடைக்கின்றன.

 

கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க்குழாய்களை விட  இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும்  மாறுபட்டதாகவே  தெரிகிறது. பனங்குடி மயிலாடும் போக்கு கண்மாயை அடுத்து சுமார் 15 ஏக்கருக்கு பானை ஓடுகள் பரந்து விரவிக் கிடக்கின்றன. இதில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மேலும் வட்டச்சில் எச்சங்களை  கண்டெடுத்தோம்‌.

 

பரந்து விரிந்து கிடக்கிற பானை ஓடுகளைக் கொண்டும் குழாய் வடிவத்தில் கிடைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் பிற தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குழாய் அமைப்பைக் கொண்டும் இது வாழ்விடப் பகுதி என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களையும் காண முடிகிறது‌. அந்த கல் வட்ட எச்சங்களுக்கிடையே முதுமக்கள் தாழி பானை ஓடுகளும் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.

 

இவ்விடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் பேசிய பொழுது மாவட்ட நிர்வாகம் வழியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .இது குறித்து கிராம மக்களிடையே  தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம்' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாண்டியன் கோட்டையில் மீண்டும் ஒரு தமிழி எழுத்துப் பொறித்த பானையோடு கண்டெடுப்பு

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Another find with a pot inscribed with Tamil script at Pandyan Fort

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்துப் பொறித்த மீண்டும் ஒரு பானையோட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செயலாளர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன், துணை செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் காளையார்கோவில் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டதில் தமிழி எழுத்துப் பொறித்த பானையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, 'திருக்கானப்பேர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட காளையார்கோவிலில் சங்க கால கோட்டை இருந்த இடம் இன்றும் மக்களால் பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையை சுற்றி அகழி, நடுவில் நீராவி குளம் உள்ளிட்டவை 37 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளன‌.

புறநானூற்றில் 21வது பாடலில் கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி  இடம்பெற்றுள்ளது, இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்த போது அவனது உறுதியான கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்டான். அது இரும்பு உலையில் கொதித்த இரும்பில் நீரை ஊற்றும் போது இரும்பானது நீரை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் அதைப்போல பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் சென்ற இக்கோட்டையை மீளப் பெற முடியாது,  என்னும் செய்தி அப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

இலக்கியச் சான்றோடு வரலாற்றுச் சான்றாக இன்றும் இக்கோட்டை விளங்குகிறது. கோட்டையின் காவல் தெய்வமாக கிழக்குப் பகுதியில் முனீஸ்வரர் கோவிலும் தெற்குப்பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இப்பகுதி முழுவதும்  பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது.அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள்,  பானை ஓட்டுக்கீறல்கள், குறியீடுகள், 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்து  எழுதப்பட்ட பானையோடு, நெசவுக்கு அல்லது வேறொரு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவிகள் ஆகியவை முன்பு கிடைத்துள்ளன.

Another find with a pot inscribed with Tamil script at Pandyan Fortபானையோட்டில் தமிழி எழுத்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் "மோசிதபன்" என்று எழுதப்பட்ட தமிழி எழுத்து பானையோடு மேற்பரப்பு கள ஆய்வில் இவ்விடத்தில் கிடைத்தது. தற்பொழுதும் மேற்பரப்பு கள ஆய்வில் 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் ' ன் கூட்டம்' என்று எழுதப்பட்ட பானையோடு ஒன்று கிடைத்துள்ளது. ன் என்பது தனி எழுத்தாகவும் அதனை அடுத்து இடைவெளியுடன் தொடர்ந்து கூட்டம் என்பது தொடர்ச்சியாகவும் வந்துள்ளது.  தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் 'ன் கூட்டம்' அல்லது 'ன் ஊட்டம்' என வாசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.


மேலிருந்து கீழாகவோ கீழிருந்து மேலாகவோ எழுதப்பட்ட எழுத்துகள்

பொதுவாக பானைகளில் இடமிருந்து வலமாக எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம் ஆனால் இப்பானை ஓட்டில்  எழுத்துகள் கீழிருந்து மேலாகவோ, மேலிருந்து கீழாகவோ எழுதப்பட்டிருக்கிறது. பானை வனைந்த சக்கர அச்சுப்பதிவு  எழுத்துக்கு நேர் மாறாக அமைந்துள்ளதால் இவ்வாறான முடிவுக்கு வர முடிகிறது.

தொடர்ந்து கிடைத்த தமிழி எழுத்துகள்

இரண்டு  ஆண்டுகளுக்கு முன்னாள் கோட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாததால் நீராவி குளத்தின் இரு பக்கமும் மழைநீர் வெளியேறும் வண்ணம் மூன்றடி ஆழத்தில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது, அக் கால்வாய் பள்ளத்திலே முன்பும் தற்பொழுதும் தமிழி எழுத்து பானையோடு கிடைத்திருக்கிறது. தொடர்ச்சியாக தமிழி எழுத்து பானையோடு பாண்டியன் கோட்டை பகுதியில் கிடைப்பதால் இது கானப்பேர் எனும் பாண்டியன் கோட்டை அமைந்த முதன்மை பகுதி என்பதோடு வரலாற்றுத் தொன்மை புதைந்த மேடாகவும் உள்ளது.

இவ்விடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்யும் பொழுது பழமையான வரலாறு வெளிப்படும், மேலும் தமிழி எழுத்து பொறித்த பானையோட்டின் மதிப்பு கருதி பின்பு சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள் கண்டெடுப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Discovery of Pot Symbols at Pandyan Fort

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன்,செயலாளர் இரா.நரசிம்மன்,கள ஆய்வாளர் கா. சரவணன், உறுப்பினர் சு.காளீஸ்வரன் ஆகியோர் காளையார்கோயில் பாண்டியன் கோட்டை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில்  ஈடுபட்டதில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, 'திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவிலில் சங்க கால கோட்டை, பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடாக 37 ஏக்கரில் இன்றும்  காட்சி தருகிறது.

கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி புறநானூற்றில் 21 வது பாடலில் இடம் பெற்றுள்ளது, இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்ததும் அவனது கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி பெற்றதும் அக்கோட்டையின் சிறப்புகளும் பாடலில் இடம் பெறுகின்றன.இலக்கியத்தின் சான்றாக இன்றும் இக்கோட்டை காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுவதும்  பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. மேலும் பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் மோசிதபன் என்று எழுதப்பட்ட பானை ஓடும் முன்பு கிடைத்தது, நெசவுக்கு அல்லது வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவி ஒன்றும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது‌.

பானை ஓட்டு குறியீடுகள்

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில்  தற்பொழுதும் பானை குறியீடுகள் கீறல்கள் கிடைத்துள்ளன.

பானை ஒட்டு குறியீடுகள் கீறல்கள் தங்களது பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாகவோ அல்லது வேறு செய்தியை தெரிவிப்பதற்காகவோ பொறிக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இவை எழுத்தறிவுக்கு முன்பிருந்தும் எழுத்தறிவு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன. இன்றும் நம்மிடையே குறியீடுகள் பொறிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. முக்கோண வடிவிலான குறியீடு, சதுர வடிவிலான குறியீடு சிதைவுற்ற வடிவில் கிடைத்துள்ளன, க ண போன்ற தமிழி எழுத்து வடிவமுடையது போன்ற பானையோடு கிடைத்து இருந்தாலும் தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் அது குறியீடாகவே கருதப்படுகிறது.

Discovery of Pot Symbols at Pandyan Fortஎலும்பாலான கருவி முனை

சங்க காலத்திலேயே நமது முன்னோர்கள் நெசவு உள்ளிட்ட தொழில்களுக்கு நுட்பமான பல கருவிகளையும் பயன்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்து இருக்கக்கூடிய எழும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதே போன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சரிடம் விண்ணப்பம் வழங்கியதின் வழி தொல்லியல் துறை கள மேலாய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல் நடைக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர், இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் தொல்லியல் துறை அடுத்து வரும்  ஆண்டுகளில் அகழாய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.