Discovery of Niladanam stone engraved with Vamana symbol

Advertisment

திருப்புவனம் வட்டம் திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நில தானக்கல் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அய்யப்பன் மற்றும் சோனைமுத்து ஆகியோர் அளித்த தகவலின் படி அவ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் வாமனச் சின்னங்கள் கோட்டுருவமாக பொறிக்கப்பட்ட எல்லைக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மன்னர்களின் வழியாக கோவில் இறைவனுக்கும் கோவில் பணி சார்ந்த பணியாளர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டு வந்துள்ளன. திருப்பாச்சேத்தியிலும் பாண்டியர் காலந் தொட்டு நிலக்கொடை வழங்கப்பட்டதாகவும் சதுர்வேதிகளுக்கு நிலக்கொடை வழங்கப்பட்ட செய்தியோடு குலசேகரப் பாண்டியன் 13 ஆம் நூற்றாண்டில் 40 அந்தணர் குடியிருப்பை ஏற்படுத்தியதாகவும் பதிவுகள் உள்ளன. நிலதானத்தை குறிக்கும் வாமன உருவம்.

Advertisment

 Discovery of Niladanam stone engraved with Vamana symbol

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமானது மாவலி சக்கரவர்த்தி தன்னை உலகில் பெரும் அரசனாக நினைத்து கர்வம் கொண்டிருந்ததை அடக்க, மூன்றடி உயரத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்து கையில் குடை மற்றும் கெண்டி எனும் நீர் செம்புடன் சென்று தனக்கு தன் காலால் மூன்றடி நிலம் கேட்டு நெடியோனாய் நீண்டு வளர்ந்து தன் காலால் உலகத்தை அளந்து மாவலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அழித்தார். இதை முன்னிறுத்தி நில தானம் தொடர்பான கல்வெட்டுகளில் வாமன அவதாரமும் அவர் கையில் வைத்திருந்த பொருள்களையும் பொறிப்பது வழக்கம்.

செண்டு:

இந்தக் கல்லில் குடை, கெண்டி, மற்றும் செண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. செண்டு என்பது அதிகாரம் உள்ளவர்களின் கையில் அதாவது மன்னர்களின் கையில் இருக்கும். இக்கல்லில் செண்டு பொறிக்கப் பெற்றிருப்பதால் நிலக்கொடை இவ்வெல்லை வரை வழங்கப்பட்டிருப்பதாகவும் வழங்கப்பட்ட அரசனின் அதிகாரம் இவ்வெல்லைவரை உள்ளதாகவும் கொள்ளலாம்.

பிடாரி வழிபாடு:

Advertisment

சம்பராயனேந்தல் மற்றும் திருப்பாச்சேத்தி எனும் இரண்டு ஊருக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் திருப்பாச்சேத்தியின் கிழக்கு எல்லையில் இக்கல் அமைந்துள்ளது. ஒரு காலகட்டத்தில் தங்களுக்கும் தங்களின் கால்நடைகளின் பிணிக்கும் இந்த கல்லை வணங்காமல் போனதே காரணம் என நினைத்த மக்கள் அதனால் அதை வணங்க ஆரம்பித்தனர். பின்னாளில் இவ்வூர் மக்கள் இதை தற்போது எல்லைப் பிடாரியாக வழிபட்டு வருகின்றனர். இன்றும் ஊர் எல்லையின் காவல் தெய்வமாக பிடாரியாக இவ்வெல்லைக்கல்லுக்கு பலியிட்டு படையலிட்டு வணங்கப்படுவதாக இந்த இடத்திற்கு அருகில் வசித்து வரும் செல்வராஜ் கள ஆய்வின் போது தெரிவித்தார். கள ஆய்வின் போது ஆசிரியர் க.இராஜா உடனிருந்தார் என்று கூறினார்.