ADVERTISEMENT

‘ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய தகவல் 

09:35 PM Mar 25, 2024 | prabukumar@nak…

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஐ.பி.எல். டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை (26.03.2024) நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், தங்களது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் (Chennai Super Kings Cricket Limited) நிறுவனத்திடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT