ADVERTISEMENT

“மாணவர்களுக்கு ஜி.எஸ்.டி.யா?... அண்ணா பல்கலைக்கழக அறிவிப்புக்கு கீ.வீரமணி கண்டனம்!

04:21 PM Nov 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து விஷயங்களிலும் புகுத்தியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில், கல்வியிலும் ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இனி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி. கட்டணமாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம், இணைப்புக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி தரக் கூடியது. உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,‘இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவர்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான ‘டூப்ளிகேட்’ சான்றிதழ் பெறவும், ‘மைக்ரேஷன்’ என்ற இடமாற்று சான்றிதழ், பருவத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். கல்விக் கட்டணம், பருவத் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு சான்றிதழ் பெறுவது, தரவரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் ஆகியவற்றுக்கு மட்டும் வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி தரக் கூடியதும், உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டிய அறிவிப்புமாகும்.

கல்வி தர வேண்டியது அரசின் கடமை; சேவை. ஆனால், அதை வணிக நோக்கிலான சேவையாகக் கணக்கில் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரியைச் சேர்ப்பது கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

கல்வி கடைச் சரக்கா?

கல்வியைக் கடைச் சரக்காக்க வேண்டும் என்ற உலக மயம் - தனியார் மயம் - பொருளாதார மயமாக்கும் கொள்கைகளுக்கான ஏற்பா இது? கல்வியை வணிகச் சேவையாகப் பார்க்கச் சொல்லி அறிவுறுத்திய The General Agreement on Trade in Services (GATS) ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கையா? அரசு உடனடியாக இதில் கவனத்தைச் செலுத்தி, இந்நடவடிக்கையை நிறுத்துதல் அவசியம் - அவசரம்! கரோனா, இயற்கைப் பேரிடர்கள் என தொடர்ந்து எழும் பிரச்சினைகளால், பொருளாதார வலிவற்றுக் கிடக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மீது 18% வரியைத் திணிப்பது தாங்கொணாச் சுமையாக முடியும்.

அரசு வழங்கும் கல்வியையே மெல்ல மெல்ல வணிகப் பொருளாக மாற்றும் நடவடிக்கைக்குக் கால்கோளாக இது அமைந்துவிடக் கூடாது. கல்விக்கும், மாணவர்களுக்கும் முக்கியத்துவம் தந்து திட்டமிட்டுச் செயலாற்றிடும் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT