ADVERTISEMENT

தரைதட்டிய இழுவைக் கப்பல்; கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்

11:03 AM Sep 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக்கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவை கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி கடந்த 9 ஆம் தேதி காலையிலிருந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அப்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடந்து சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு கடந்த 10 ஆம் தேதி காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மிதவை படகு மூன்று இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவை படகின் மூலம் மிதவை கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கயிறு அறுந்து விட்டது. அடுத்த முயற்சியாக அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்து தான் மிதவை கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்திருந்தனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடலில் தரை தட்டிய கப்பலில் இருக்கும் நீராவி ஜெனரேட்டர்கள் பாதுகாப்பாக உள்ளன. நீராவி ஜெனரேட்டர்கள் படகு தளத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளதால் இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. அதே சமயம் இந்திய அணுமின் உற்பத்திக் கழக விஞ்ஞானிகளும், ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். பாறை இடுக்குகளில் சிக்கி உள்ள இழுவைக் கப்பல் 2 அல்லது 3 நாட்களில் மீட்கப்படும். கடந்த 2 நாட்களாக கப்பலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கப்பலை மீட்க மேலும் 3 நாட்கள் ஆகும். தரைதட்டி கடலில் நிற்கும் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மிதவை கப்பல் தற்பொழுது வரை அகற்றப்படாதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT