Shut down nuclear reactors and save Tamil Nadu from destruction Vaiko

Advertisment

கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணு உலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாரணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணு உலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணு உலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் அமைக்கப்பட்ட செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள்.எண்ணற்றவர்கள் இறந்தார்கள். ஜப்பானில் அணு உலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளார்கள். ஜப்பானியர்கள் அணு உலையை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இதே போன்று கூடங்குளம் அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற அணுஉலைக் கழிவு நீரை வங்காள விரிகுடாவில் தான் திறந்துவிடுவார்கள். இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலை மீது பேராபத்து கத்திபோல் தொங்குகிறது. கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவது ஒன்றுதான் எதிர்காலத்தில் தென்தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அரசுக்குச் சொல்வதோடு, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நிலவில் கால் வைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பூமியே அழிந்துபோகும் என்பதை கவனப்படுத்துகிறேன்.

Advertisment

ஒன்றரை ஆண்டு காலம் இடிந்தகரை மக்கள் போராடினார்கள். அரசுகள் கண்டுகொள்ளவில்லை. போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் கூட ஒரு வழக்கு இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. கூடங்குளம் அணு உலைகளால் செந்தமிழ்நாட்டின் தென்பகுதி அழிவுக்கு ஆளாகும் என மீண்டும் எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.