Skip to main content

ஆபரேஷன் சமுத்ர சேது! இலங்கையில் தவித்த 713 பேர் கப்பலில் தூத்துக்குடி வருகை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020


உலக மக்களின் வாழ்க்கையையும், உயிர்களையும் கொடூரமாக்கிய கரோனா, சுனாமி போன்று வேகமெடுத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ளவர்கள் உயிர் அச்சத்தால் தங்களின் பிறப்பு நாடுகளுக்குப் பதைபதைப்புடன் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 


வெளிநாடுகளில் கல்வி, வணிகம், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்கள் கரோனா அச்சத்தால் பிள்ளைகுட்டிகளுடன் விமானம், கப்பல் போன்றவைகளில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பலர் திரும்ப வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்ற நிலையில்தான் இலங்கையிலுள்ள இந்தியர்களும் இருக்கிறார்கள்.

அரசின் திட்டப்படி இலங்கையில் தவித்த தென்னிந்தியாவை சேர்ந்த 713 பேர்கள் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்.ஜலஷ்வா மூலம் இலங்கை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குப் புறப்பட்டனர்.

 

 


இந்தக் கப்பல் புறப்படுவதற்கு முன்னதாக கப்பலில் ஏறியவர்களை கடற்படை டாக்டர் பிரசாந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதித்தனர்.

ஆபரேஷன் சமுத்ர சேது என்று இந்த மீட்புப் பணிக்காகப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் கடற்படையின் கிழக்கு பிரிவை சேர்ந்தது. இதில் கரோனா மீட்பு பணிக்கென 11 அடுக்குகளில் சுமார் 3000 படுக்கைகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு மருந்து பொருட்களையும் உள்ளடக்கியிருந்தது. மிகமிகத் தேவையான அத்யாவசிய பொருளான வெண்டிலேட்டர் வசதியும் கொண்டது இந்த ஐ.என்.எஸ். அழைத்துவரப்பட்ட 713 பேர்களில் 693 பேர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மீதமுள்ளவர்கள் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். தமிழர்களில், வந்தவர்கள் நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களும் அடக்கம்.

 

nakkheeran app




தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், எஸ்.பி.அருண் பாலகோபாலன், துறைமுக சபை சேர்மன் ராமசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை 9.25 க்கு பெர்த்திற்குள் வந்த ஜலஷ்வாவைக் கைதட்டி வரவேற்றனர்.

32 மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் 25 பஸ்களில் சமூக இடைவெளியுடன் அமரவைத்து உணவு குடி தண்ணீர் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களனைவரும் அந்தந்த  மாவட்டங்களின் மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டு தொற்று என்றால் சிகிச்சைக்கும், நெகட்டிவ் என்றால் தனிமைப்படுத்தலும் செய்யப்படுவர் என்றார் கலெக்டர் சந்தீப் நந்தூரி. அடுத்து 7ம் தேதி மாலத்தீவிலிருந்தும், 17ம் தேதி ஈரானிலிருந்தும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வருகிறது இந்தியக் கடற்படை கப்பல்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.