ADVERTISEMENT

நான்கு நாட்களில் திருமணம்; திடீரென வந்த செல்போன் அழைப்பு - துக்க வீடாக மாறிய கல்யாண வீடு

03:47 PM May 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஐவேலி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 27 வயதான இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், விக்னேஷின் வீட்டில் அவருக்கு சில மாதங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி சரியான வரன் அமையாமல் இருந்து வந்தது. அதே சமயம், மகனுக்கு வரன் அமையவில்லையே என கவலையோடு இருந்த பெற்றோருக்கு, சேலம் ஏத்தாப்பூரில் பெண் இருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் வந்துள்ளது. அதன்பிறகு, விக்னேஷுடன் அவரின் பெற்றோரும் சேர்ந்து பெண் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்ணை விக்னேஷிற்கும் அவரின் பெற்றோருக்கும் பிடித்துப்போக, இரு வீட்டிலும் ஜாதகம் பார்த்துள்ளனர். ஜாதகமும் பொருத்தமாக இருந்ததால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து மே 25ஆம் தேதியன்று திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதே நேரம் விக்னேஷும் திருமணப் பெண்ணும் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்துள்ளனர். இதற்கிடையில், இருவீட்டு பெரியவர்களும் திருமண வேளையில் பிசியாக இருந்துள்ளனர். இத்தகைய சூழலில், திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், புது பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. ஒருபுறம் திருமண வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது புதுப்பெண்ணின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் தன்னுடைய பெயர் அஸ்மா என்றும் தான் சங்ககிரியில் குப்தா காலனியில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு திருநங்கையாக இருப்பதால் விக்னேஷ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். அப்போது, யாரோ நண்பர்கள் தான் ஃபோன் செய்து விளையாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டு அலட்சியமாக பேசிய புதுப்பெண்ணிடம் அந்த திருநங்கை திடீரென அழ ஆரம்பித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மணப்பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. அதன் பிறகு, "இவ்ளோ நாள் பழகியதாக சொல்றிங்களே.. ஒரு போட்டோ கூடவா எடுக்கல” என விபரமாக கேட்க, அழுதுகொண்டே பேசிய அஸ்மா, "ஃபோட்டோதானே வேணும்.. இதோ உன்னோட வாட்ஸப் நம்பருக்கு அனுப்புறேன் பாரு" என கூறிவிட்டு ஃபோனை வைத்துள்ளார்.

இந்நிலையில், குழப்பத்தில் இருந்த புதுப்பெண்ணின் செல்போனுக்கு உடனே வாட்ஸப்பில் நிறைய ஃபோட்டோக்கள் வந்துள்ளன. அந்த ஃபோட்டோக்களைப் பார்த்த புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தங்கள் மகள் அழுவதைக் கண்ட பெற்றோர், அவரிடம் நடந்த விஷயத்தை கேட்டுள்ளனர். அதன்பிறகு, நடந்த எல்லாவற்றையும் புதுப்பெண் விபரமாகக் கூறி வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களையும் காட்டியுள்ளார். அதிர்ந்து போன பெற்றோர், புது மாப்பிள்ளை விக்னேஷிற்கு போன் செய்து கடிந்து கொட்டியுள்ளனர்.

இதையடுத்து, விக்னேஷ் சில விளக்கங்களைக் கூறியும் சமாதானம் ஆகாத பெண்ணின் பெற்றோர், விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கூறியுள்ளனர். மேலும், அங்கிருந்த விக்னேஷையும் அழைத்து விசாரித்துள்ளனர். இதற்கு மேல் பொய் சொல்லவே முடியாது என்பதை புரிந்துகொண்ட விக்னேஷ், பெற்றோரிடமும் பெண்ணின் உறவினரிடமும் மனம் விட்டு பேசியுள்ளார். சங்ககிரி, குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் அஸ்மாவிற்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் சில காலம் அவரோடு நெருங்கி பழகியதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் ஒரு திருநங்கையாக இருப்பதால் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, அஸ்மாவிடம் விக்னேஷின் பெற்றோர் பேசியிருக்கின்றனர். அப்போது, "நான் விக்னேஷை எனது கணவராக நினைத்து கொண்டுதான் இத்தனை நாட்கள் பழகினேன் என்றும், அவரை என்னால் மறக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, விக்னேஷின் பெற்றோரிடம் பேசும்போது அவரை மாமா, அத்தை என்று உறவு முறையில் அழைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயியுள்ளனர். அதே சமயம், இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களால், விக்னேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். யாரிடமும் பேசாமல் மிகுந்த கவலையில் இருந்த விக்னேஷ் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் மணமகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT