ADVERTISEMENT

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம்! - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!

11:13 PM Dec 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புயல், மழையினாலும், என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் தரவில்லை என்றால், என்.எல்.சியை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்ட இயற்கை வளத்தையும், இம்மாவட்ட மக்களின் வீடுகள், நிலங்கள், உடைமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து உருவாக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இன்றைய நாளில் பல்லாயிர கோடிக் கணக்கான மதிப்புமிக்கச் சொத்துகளை உடையதாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் லாபம் ஈட்டக்கூடிய மாபெரும் நிறுவனமாகவும் பெருவளர்ச்சி பெற்றிருக்கிறது.

இவ்வேளையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய, மனிதாபமற்ற செயலாகும். குறிப்பாக குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளான கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, மேலப்புதுப்பேட்டை, வரதராஜன்பேட்டை, ரெட்டிப்பாளையம், குருவப்பன்பேட்டை, ஆடூர்அகரம், கண்ணாடி, விருப்பாட்சி, கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், தீர்த்தனகிரி, சிறுபாலையூர், ஆதிநாராயணபுரம், காயல்பட்டு, வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிபள்ளம், ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், அகரம், ஆயிக்குப்பம், அணுக்கம்பட்டு, பெத்தநாயக்கன்குப்பம், ரெங்கநாதபுரம், திருச்சோபுரம், தியாகவல்லி, தையல்குணாம்பட்டினம், தம்பிப்பேட்டை, டி.பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும், வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளிலும் நிரவி புயல் மற்றும் கன மழையின் காரணமாகவும், குறிப்பாக இப்பகுதிகளின் வழியாக என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் அடிக்கடி, இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு வீடுகள், கால்நடைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டு தோறும் மழை பெய்யும் காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீராலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். குடியிருப்பு வீடுகளும் இடிந்து விழுகின்றன. என்.எல்.சி நிறுவனத்தினால் பாதிக்கப்படுகின்ற இந்தப் பகுதி மக்களுக்கு இந்நிறுவனம் எந்தவித உதவியும் செய்ய முன்வருவதில்லை. மேலும் நிரந்தரமாக வடிகால் அமைப்பதற்கு எந்தவித நிரந்தரமான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதிக லாபம் ஈட்டக்கூடிய என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிரந்தரமாக கான்கீரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி நிறுவனத்தினால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்.எல்.சி CSR நிதியினை முழுவதுமாக இம்மாவட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

எங்கள் நிலம், வீடுகளையும், உடைமைகளையும் அழித்து உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் CSR நிதியினை வேறு மாநிலத்திற்குப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு CSR நிதியின் மூலம் அடிப்படை வசதிகளான பாலங்கள், சிறு கல்வெட்டுக்கள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், வடிகால் வாய்க்கால்கள், குடிநீர், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்துத் தர வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

மேலும் என்.எல்.சி. சுரங்கம் வெடி வைப்பதினாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடலூர் மாவட்டம் முழுவதும் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகள், வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் ஆழ்குழாய்க் கிணறுகள் பழுதடைந்துவிடுகிறது. ஆகவே மேற்கண்ட பகுதிகளுக்கும் மற்றும் NLC சுரங்கத்தைச் சுற்றியுள்ள குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் உடனடியாக என்.எல்.சி. நிர்வாகம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். நெய்வேலி என்.எல்.சி சார்ந்த பணிகளில், கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக மக்களின் துயர் துடைக்க என்.எல்.சி நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்களை அழிக்கும் இந்நிறுவனம் தேவையா? என்கிற மனநிலைக்கும் இம்மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு மாபெரும் பெரிய போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT