ADVERTISEMENT

லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு அரசு தீர்வுகாண வேண்டும் இல்லையேல் விலையுயர்வு - ராமதாஸ் வலியுறுத்தல்

04:28 PM Jul 21, 2018 | vasanthbalakrishnan

இரண்டாவது நாளாக இன்று இந்தியா முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் லாரி வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சரக்குந்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்ட நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள சுங்கவரிச்சாலைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணமாக ரூ.18,000 கோடியை வசூலித்துக் கொள்ள வேண்டும்; பெட்ரோல்&டீசல் விலைகளை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்வதுடன், அவற்றை ஜி.எஸ்.டி வரி விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும்; மூன்றாம் நபர் காப்பீட்டுக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகியவை தான் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவை ஆகும். இவை நியாயமானவை என்பதுடன், இவற்றை ஏற்றுக் கொள்வதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி மூலம் ஆண்டுக்கு ரூ.17,250 கோடி வருவாயாக கிடைக்கிறது. அதை விட அதிகமாக ஆண்டுக்கு ரூ.18,000 கோடி சுங்கவரி ஒரே தவணையில் கிடைக்கும் என்பதால் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் அரசுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருபவை தான் என்பதால் அவற்றை ஏற்பதாக அறிவித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தான் அனைவருக்கும் பயனளிக்கும்.

ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சரக்குந்து உரிமையாளர்களை மத்திய அரசு இதுவரை பேச்சு நடத்தக் கூட அழைக்காததால், வேலைநிறுத்தம் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் நேற்றிலிருந்தே தெரியத் தொடங்கிவிட்டன. சரக்குந்துகள் ஓடாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நடமாட்டமும் தடைபட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 65 லட்சம் சரக்குந்துகளும், தமிழ்நாட்டில் 4.50 லட்சம் சரக்குந்துகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருப்பதால் போராட்டம் முழுமையடைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஆடைகள், மோட்டார்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. அடுத்த சில நாட்களில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அடுத்தடுத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைப்பதற்கு இடமில்லாமல் உற்பத்தியையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உள்ளது.

சரக்குந்துகள் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு பலநூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதை தடுக்க முடியாது. இப்படியாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தம் நீடிப்பதை விட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவது தான் சரியானதாகும்.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து சரக்குந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று சரக்குந்துகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT