ADVERTISEMENT

கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் அரசு.. எதிர்க்கும் விவசாயிகள்..!

10:55 AM Mar 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மறைந்த முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையான நீலகிரி மலையில் பெய்யும் மழை நீர் இந்த அணைக்கு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாய பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் இந்த அணை நீர் பயன்படுகிறது. இந்த அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் என மூன்று வாய்க்கால் மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கு இந்த நீர் செல்கிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும், காலிங்கராயன் ஈரோடு மொடக்குறிச்சி பகுதியிலும், கீழ்பவானி வாய்க்கால் கோபி, பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் என பல பகுதிகளுக்கும் செல்கிறது. கீழ்பவானி வாய்க்கால் நீரால் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது.

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. .கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு முன்பே அறிவித்தது. இதற்கு அப்போதே விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும், சென்ற 25ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமர் மோடி கோவை வந்தபோது, இந்தத் திட்டத்தை அவரே தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது முழுமையாக நின்றுபோய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், அதைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு நீர் மேலாண்மை புள்ளி விபரத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சென்ற 12ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி 26-2-2021 சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சித் தலைவர் ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களைக் கையில் ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அதே போல் 27ஆம் தேதி சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், 1ஆம் தேதி திட்டம்பாளையத்திலும், 2ஆம் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் என வாய்க்கால் பகுதிகளில் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்திவருகின்றனர். அரசு, ‘இத்திட்டம் மூலம் வாய்காலில் ஒடும் நீர் வெளியே கசியாமல் வாய்காலின் கடைமடையான கடைசி வரை செல்லும்’ என்று தெரிவிக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள், “இது மண்னால் கட்டப்பட்ட வாய்க்கால். இதில் நீர் செல்லும்போது இரு கரைகளிலும் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மண்ணில் நீர் சென்றால்தான் அந்த மண் நீரை தனக்குள் உறிஞ்சி சேமித்து அப்பகுதியில் நீர் இருப்பை வளம் கொடுக்கும். கான்கிரீட் அமைத்தால் நீர் கசிவு இருக்காது. இதனால் மறைமுகமாக பயன்பெற்றுவந்த இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய பூமி பாலைவனமாகும். மக்களின் குடிநீர் தேவைக்கும் பரிதாபகரமாக அலைய வேண்டிய நிலை ஏற்படும். ஓடும் நீரை, நீர் நிலைகளை அதன் போக்குக்கு இயற்கையாக விடுவதை விட்டுவிட்டு கான்கிரீட் தளம் அமைப்பது என்பது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கேடு விளைவிப்பதுதான்” என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT