ADVERTISEMENT

தன்னிச்சையாக ஆள் நியமித்து பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

03:41 PM Mar 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. இதில், 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 75 மாணவர்களும், 72 மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் இடைநிலை சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் பழனிச்சாமி, காலையில் பள்ளிக்கு வந்த உடன் அலுவலக வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு அலுவல் பணி எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்ட அலுவலகம் செல்வதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு வெளியே சென்று விடுவாராம். 3000 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக இவராகவே நியமித்து, இவர் நடத்த வேண்டிய வகுப்புகளை, ஆசிரியர் அல்லாத அந்த பெண் நடத்தி வருகிறாராம்.

இது குறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று பெற்றோர்கள் தாளக்குடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். இதனையறிந்து அங்கு வந்த சமயபுரம் போலீசார், பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அலுவலரிடம் முறையிட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததால், லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் அம்பிகாபதி அங்கு வந்தார். அவர், ‘உரிய முறையில் விசாரணை நடத்தி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவர் நடவடிக்கை எடுப்பார்’ என்று சமாதானம் செய்துள்ளார்.

இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் தெரிவிக்கையில், பிரச்சனைக்குரிய ஆசிரியர் பழனிச்சாமி ஏற்கனவே மண்ணச்சநல்லுார் சாலை திருப்பைஞ்சீலி அரசு உயர் நிலை பள்ளியில் பணியாற்றியபோது இதே போல் நடந்து கொண்டதால், அங்கும் பொதுமக்கள் அவரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர் தாளக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்தும் அவர் தனது ஆள்மாறாட்ட வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார் என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT