ADVERTISEMENT

'அரசு திட்டங்கள் தகுதியான பயனாளிக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'-அமைச்சர் சக்கரபாணி பேச்சு

08:04 PM Feb 02, 2024 | kalaimohan

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 'தமிழக அரசு தமிழக மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், மக்களுடன் முதல்வர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற முகாம்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், அரசு திட்டங்களின் பயன்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை சிரமமின்றி தொடர்ந்து மேற்கொள்ள அரசின் மானிய திட்டங்கள் பெரிதும் உதவியாக அமைகின்றன. இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளின் செலவை குறைக்கும் வகையில் உதவியாக உள்ளன. எனவே, வேளாண் திட்டங்களான, சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் போன்ற மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி படுத்த வேண்டும்.

பெண்கள் மேம்பாட்டிற்காக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், வருவாய்த்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகள் விடுபட்டு விடாமல் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்து விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி இருப்பின் அவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.அரசு நலத்திட்டங்களின் பயன்கள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் தகுதியான நபர்கள் விடுபட்டு விடாமல் பயனாளிகளை தேர்வு செய்திட வேண்டும்'' என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT