ADVERTISEMENT

திருப்பூர் குமரனுக்கு புகழ் சேர்க்கும் அரசு...-பா.ஜ.க.வின் வினோத அரசியல்!

08:21 PM Oct 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா நாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக ஏராளமான தியாகிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இந்த நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன். அவரது பிறந்தநாளான அக்டோபர் 4 ந் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இவ்வருடமும் அக்டோபர் 4 ந் தேதி திருப்பூர் குமரனின் பிறந்த ஊரான சென்னி மலையில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் திருப்பூர் குமரனின் சுதந்திரப் போராட்டத்தைப் போற்றி கவுரவிக்கும் வகையில் ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலையைத் தியாகி குமரன் சாலை சம்பத் நகர் எனப் பெயர் சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் முடிவு செய்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி 4ந் தேதி காலை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் 'தியாகி குமரன் சாலை சம்பத் நகர்' என்ற பெயர் பலகையினை திறந்து வைத்தார். ஈரோடு கலெக்டர் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுன்னி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி, திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் முத்துசாமி கூறும்போது,

மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஈரோடு மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்தார். அப்போதே கொடிகாத்த திருப்பூர் குமரன் பெயரில் ஈரோட்டில் எதாவது பிரதான சாலைக்கு பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்றேன். ஆனால் அப்போது முதலமைச்சர் பதில் எதுவும் சொல்லவில்லை. பிறகு எந்த சாலைக்கு பெயர் வைக்கலாம் என முதல்வரே தனியாக ஆய்வுசெய்து ஒரு மாதம் கழித்து என்னிடம் போனில் பேசும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என்று பெயர் வைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் உடனடியாக சரியான தேர்வு என்றேன். அதற்கு முதல்வர் வருகிற அக்டோபர் 4ம் தேதி குமரன் பிறந்த நாளாகும். அன்று இந்த பெயரை வைத்தால் நன்றாக இருக்கும் என்றார். இந்த நேரத்தில் இதை நான் நினைவுகூற விரும்புகிறேன். ஒரு தியாகிக்கு முதல்வர் மறக்காமல் புகழ் சேர்த்துள்ளார். முதலமைச்சருக்கு அனைவரும் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்." என்றார்.

மறைந்த தலைவர்களை அவர்களின் சமூகம் சார்ந்து செய்யப்படும் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் நடந்து வருகிறது. அந்த வரிசையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட தீரன் சின்னமலையை கவுண்டர் சமூகத்தின் அடையாளமாகவும், கொடிகாத்த திருப்பூர் குமரனை முதலியார் சமூகத்தின் முகமாகவும் அச் சமூகங்களைச் சார்ந்த பல்வேறு அமைப்பினர் கொண்டாடுகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வில் இரு சமூகங்களைச் சார்ந்த நிர்வாகிகள் வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் இதில் சமீப காலமாக பா.ஜ.க.வும் இறந்த தியாகிகளுக்கு உரிமை கொண்டாட அரசியல் களத்தை பயன்படுத்துகிறது.

தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆடி 18 அன்று ஈரோடு அரச்சலூர் அருகே அவர் பிறந்த ஓடாநிலை கிராமத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து தீரன் சின்னமலையின் அரசியல் வாரிசு நாங்கள் தான் என்றார் பா.ஜ.க.மாநில தலைவரான அண்ணாமலை. அதேபோல் அக்டோபர் 4 ந் தேதி சிவகிரியில் உள்ள குமரன் சிலைக்கு மாலை போட்ட அண்ணாமலை திருப்பூர் குமரனின் தியாகத்திற்கு பா.ஜ.க.வினர் தான் உரிமை கோர முடியும் என கூறியிருக்கிறார். மற்றொருபுறம் தீரன் சின்னமலையின் படை பிரிவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டவர் பொல்லான் இவர் அருந்ததியினர் சமூக அடையாளமாக அறிவிக்கப்பட்டு மத்திய அமைச்சரான எல்.முருகன் மறைந்த பொல்லான் நினைவு நாளுக்கு நேரில் வந்து பொல்லான் படத்திற்கு மாலை போட்டு தியாகி பொல்லானின் உண்மையான அரசியல் வாரிசுகள் பா.ஜ.க.வினரான நாம் தான் என கூறி விட்டு சென்றுள்ளார்.

மறைந்த தலைவர்களை வைத்து பா.ஜ.க.நடத்தும் அரசியலும் அறிவிப்புக்களும் ஒருபுறம் இருந்தாலும் நடைமுறையில் அரசு சார்பில் தியாகிகளை போற்றும் வகையில் தீரன் சின்னமலைக்கும், திருப்பூர் குமரனுக்கும், பொல்லானுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் அரசு சார்பில் சிலை, மணிமண்டபம், பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது என எல்லா சிறப்பையும் தி.மு.க. அரசு செய்து கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT