ADVERTISEMENT

“பொங்கலுக்கு பரிசுப்பொருளாக அல்லாமல் ரொக்கமாகக் கொடுங்கள்” - ஓ.பன்னீர்செல்வம்

12:12 PM Dec 16, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களாக அல்லாமல் ரொக்கமாக வழங்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும், ஜவுளி மற்றும் கைத்தறித் தொழிலை மேம்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டுமென்ற நோக்கத்திலும், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை எம்.ஜி.ஆர். 1983 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தாலும், தவறிழைத்த நிறுவனங்களுக்கு மீண்டும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்தப் பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT