ADVERTISEMENT

தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுமி..!

05:34 PM Oct 05, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளியான இவருக்கு ஏழு வயதில் லட்சிதா எனும் மகள் இருந்தார். லட்சிதாவிற்கு கடந்த 27ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிகிச்சை முடிந்து லட்சிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென சிறுமியின் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர், சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுமி, எழும்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கும் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்து, சிகிச்சை பலனின்றி சிறுமி லட்சிதா உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த சிலர் கற்களை வீசி எறிந்தும், நாற்காலியை கொண்டு தாக்கியும் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், முறைப்படி புகார் அளிக்குமாறு கூறினர். அதனையடுத்து அச்சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல், சிறுமியின் தந்தை குமார், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான் தன் குழந்தை உயிரிழந்ததாகவும், எனவே அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT