ADVERTISEMENT

திருமணத்தை மீறிய உறவா? கணவன் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷன் -  அதிரவைக்கும் பின்னணி

11:56 AM Aug 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

செந்தில்குமார்

ADVERTISEMENT

சேலத்தில், சினிமாவில் வருவதுபோல், பெண் விவகாரத்தில் வழக்கறிஞரை காரில் கடத்திச்சென்று கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற கும்பலை காவல்துறையினர் வாகனத்தில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

சேலம் சூரமங்கலம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வருகிறார். இவருடன் கடந்த 2019ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்குள் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும், மதுரை அணையூரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பிறகும் பெண் வழக்கறிஞருடன் செந்தில்குமார் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இதை அறிந்த இளங்கோவன், தன் மனைவி, செந்தில்குமார் ஆகியோரை கண்டித்துள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து அலைபேசியில் பேசி வந்துள்ளனர். இதனால் வெறுத்துப்போன இளங்கோவன், வழக்கறிஞர் செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆக. 6ம் தேதி மாலை, சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் செந்தில்குமாரும், இளம்பெண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளங்கோவன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், திடீரென்று செந்தில்குமாரை காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மாநகர காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்தப் பகுதியில் ரோந்து சுற்றி வந்த அழகாபுரம் காவல் ஆய்வாளர் காந்திமதி மற்றும் காவலர்களுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.


இதையடுத்து கடத்தல் கும்பலை காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் துரத்திச்சென்றனர். மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே சென்றபோது அந்த காரை மடக்கிப்பிடித்தனர். காவல்துறையினர் நெருங்கியதை அடுத்து, கடத்தல் கும்பல் இளங்கோவன், செந்தில்குமார் ஆகியோரை காருக்குள்ளேயே விட்டுவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். வழக்கறிஞர் செந்தில்குமாரை அந்த கும்பல் காருக்குள் வைத்து தலை, இடது கையில் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்து இருந்தார். அவரை உயிருடன் மீட்ட காவல்துறையினர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காவல்துறை பிடியில் சிக்கிய இளங்கோவனை (44), கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து காவல்துறையினர் நம்மிடம் கூறியது: வழக்கறிஞர் செந்தில்குமாரும், கைதான இளங்கோவனின் மனைவியும் விசாகப்பட்டணத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருந்தே அவர்கள் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பெற்றோர் வற்புறுத்தலால் அந்தப் பெண்ணுக்கு, இளங்கோவனுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனாலும் செந்தில்குமார் எப்போதும் போல் அவருடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். இதையறிந்த இளங்கோவன், வழக்கறிஞர் செந்தில்குமாரிடம் விசாரித்தபோது, உங்கள் மனைவிக்கு நான் 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறேன். அதற்காக அவருடன் பேசி கேட்டு வருகிறேன் என்று கூறி சமாளித்திருக்கிறார்.

இதை நம்பாத இளங்கோவன், என் மனைவியுடன் உங்களுக்கு தவறான உறவு இருப்பதாக சந்தேகப்படுகிறேன். ஒருவேளை, நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்து என் மனைவிக்கும், உங்களுக்கும் எந்த தவறான உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் செந்தில்குமார், அவ்வாறு வீட்டுக்கெல்லாம் வர முடியாது என்றும் சொல்லி மறுத்துவிட்டார். இதன்பிறகு, செந்தில்குமாரை எப்படியாவது மதுரைக்குக் கடத்திச்செல்ல வேண்டும் என இளங்கோவன் திட்டம் போட்டுள்ளார். இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தனது கூட்டாளிகளான ஒரு பெண் உள்பட 4 பேரிடம் உதவிகேட்டுள்ளார். இதற்கு கூட்டாளிகளும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து திருப்பூரில் வசிக்கும் தன் தோழியான தேவி என்பவரை, வழக்கறிஞர் செந்தில்குமாருடன் நட்பாக பழகவிட்டு, அவரை தங்கள் வலையில் வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர். இந்த திட்டத்தின்படி தேவி, வழக்கறிஞர் செந்தில்குமாரை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, தன்னுடன் ஒருவர் பழகிவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்றும், ஏமாற்றிய நபர் மீது வழக்குப்போட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக செந்தில்குமாருடன் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். சில நாள்களிலேயே இருவரும் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக பழகத் தொடங்கினர்.

இந்நிலையில் தேவியை சேலத்திற்கு வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். சம்பவத்தன்று சேலம் வந்த தேவியை, வழக்கறிஞர் செந்தில்குமார் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு, கோரிமேட்டில் உள்ள ஒரு திரையங்கத்தில் இருவரும் படம் பார்த்துள்ளனர். படம் முடிந்த பிறகு வெளியே வந்த தேவி, வழக்கு தொடர்பான ஆவணங்களை நகல் எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு செந்தில்குமாரையும் அழைத்துக்கொண்டு கோரிமேட்டில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு வந்துள்ளார். இதற்கிடையே, பூங்காவிற்குச் சென்றது முதல் சினிமா படம் பார்த்தது, ஜெராக்ஸ் கடையில் செந்தில்குமாருடன் நின்று கொண்டிருப்பது வரை இளங்கோவன் உள்ளிட்ட கும்பலுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக தேவி ரகசியமாக தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இதையடுத்துதான் அந்த கும்பல் கோரிமேட்டில் வைத்து, செந்தில்குமாரை காரில் கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளங்கோவன், அவருடைய கூட்டாளிகள் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இளங்கோவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடைய கூட்டாளிகளான திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் என்கிற ஆனந்த்பாபு (28), மடத்துக்குளம் கல்லாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற மணிகண்டன் (24), முதலிபாளையத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கந்தர் பாஷா (21) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனின் அண்ணன் மகன் சூர்யா மற்றும் தேவி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெண் விவகாரத்தில் வழக்கறிஞரை கடத்திச்சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT