ADVERTISEMENT

தமிழக மக்களே உஷார்! அடுத்தடுத்து வரும் ஃபோன் கால் - மிரட்டும் கும்பல்!

05:26 PM Mar 19, 2024 | ArunPrakash

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கொள்ளையர்கள், ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தொடர்பு கொண்டு சில விபரங்கள் கேட்பார்கள். அப்போது ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும். ஆனால் இப்போது பல வகைகளிலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதும், இந்த முறையில் ஏமாற்ற முடியவில்லை. அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளைக் கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், தங்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதே பாணியில் கடந்த 4 நாட்களில் 2 சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு, சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் 21,400 ரூபாயை உடனே அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கிக் கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் நடந்த மறுதினம், ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வரும் ராம் திலக் என்ற காவலரின் மனைவி அனுஷாவிற்கும் இதே பாணியில் போன் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களின் ஆதார் எண்ணை வைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் கூறி, பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனைத் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் பேசிய அனுஷா, என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள் எனத் தைரியமாகக் கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பைத் துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் இந்த நூதன மோசடி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT