ADVERTISEMENT

'மூன்று மரண தண்டனை...' ஏம்பல் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு தீர்ப்பின் முழுவிவரம்!

07:24 PM Dec 29, 2020 | kalaimohan

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 7 வயது மகள், கடந்த ஜூன் 30-ந் தேதி மாலை முதல் காணவில்லை என்று காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் கொடுத்தார். ஜூலை 1-ந் தேதி அருகில் உள்ள, குளத்திற்குள் உள்ள புதருக்குள், சிறுமி உடல் முழுவதும் காயத்துடன் இறந்துகிடந்தது தெரியவந்தது. போலிசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கொலையாளியை விரைந்து கைது செய்ய, தனிப்படைகள் அமைத்தார். அடுத்த நாளில் அதே பகுதியைச் சேர்ந்த, சாமுவேல் என்கிற ராஜாவை (வயது 26) போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பாலியல் சீண்டல்களின் போது, சத்தம் போட்டதால் சிறுமியை அருகில் கிடந்த மரக்கட்டையால் அடித்ததில், சிறுமி மரணமடைந்துவிட்டார். அதனால் புதருக்குள் மறைத்துப் போட்டுவிட்டுத் தப்பியதாகக் கூறினான்.

இந்த வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் ஜூலை 7 -ந் தேதி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து டிசம்பர் 29 -ந் தேதி மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி, ஆர்.சத்யா தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பு விபரம்:

7 வயது சிறுமியைப் பலவகையிலும் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தி கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டு *இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 302 இன் கீழ், மரண தண்டனையும்* பிரிவு 5 (m) r/w 6(1) பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் 2019-இன் கீழ், மரண தண்டனையும் மற்றும் 5 (j) (iv) r/w பிரிவு 6(1) பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் 2019-இன் கீழ், மரண தண்டனையும் என மொத்தம் 3 மரண தண்டனைகள் வழங்கினார். மேலும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 r/w பிரிவு 3(2) (v) எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ், ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியும், இந்தியத் தண்டனை பிரிவு 363-இன் கீழ், 7 வருட கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் கட்டத் தவறினால் 2 மாத கடுங்காவல் சிறைத் தண்டனையும், இதர பிரிவு 201-இன் கீழ் 7 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5,000 அபராதம் கட்ட தவறினால் இரண்டு மாத சிறைத் தண்டனை என்று மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வாசித்து முடித்தவுடன் தீர்ப்பு எழுதிய பேனா உடைக்கப்பட்டது.

அதாவது, 3 மரண தண்டனைகளும், ஒரு ஆயுள், 14 வருடம் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் 4 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த சிறுமியின் தாயாருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், வழக்கு நடத்திய அரசு வழக்கறிஞருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT