7 year old girl incident in empal..  collector relief

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன அடுத்த நாள் கருவேங்காட்டுப் பகுதியில் கிழவிதம்மம் குளத்தில் செடி கொடிகளுக்கு மத்தியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர செய்தது. திமுக, சிபிஎம் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்களும் ஏம்பல், புதுக்கோட்டை பகுதிகளில் நீதி, நிவாரணம் கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அதன் பிறகே சிறுமியின் சடலத்தை வாங்க உறவினர்கள் ஒத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்திருந்த நிவாரண உதவித் தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டஉதவித் தொகை ரூ 8.25 லட்சத்தில் முதல் தவணையாக ரூ 4 லட்சத்து12, 500 க்கான காசோலை என மொத்தம் ரூ.9 லட்சத்து12,500க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு வீட்டுமனைப்பட்டா, அரசு வீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை மீட்க 1098 எண்ணை பயன்படுத்த வேண்டும் என்றார்.