ADVERTISEMENT

அரசு வேலை ஆசை காட்டி மாற்றுத்திறனாளியிடம் மோசடி; தந்தை, மகனுக்கு வலைவீச்சு

10:39 AM Nov 23, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாற்றுத்திறனாளியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக அலுவலரும், அவருடைய மகனும் 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). மாற்றுத்திறனாளியான இவர், சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடந்த 2018-ம் ஆண்டில் அரசு வேலையில் சேர முயற்சித்தபோது, வனவாசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக அலுவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவரும் அவருடைய மகன் பாலசந்தர் என்பவரும் தனக்கு வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.50 லட்சம் ரூபாய் பெற்றனர்.

ஆனால், அவர்கள் உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அதைத் திருப்பித் தராமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையில், எஸ்.ஐ. சந்திரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் மாற்றுத்திறனாளி முத்துசாமி அளித்த புகார் உண்மை எனத் தெரிய வந்தது. இதற்கிடையே, கோபாலகிருஷ்ணன், அவருடைய மகன் பாலசந்தர் ஆகிய இருவரும் திடீரென்று தலைமறைவாகி விட்டனர். குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT