ADVERTISEMENT

நீதிபதிகளை விமர்சித்து ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை

02:30 PM Nov 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீதிபதிகளையும், அவர்கள் குடும்பத்தினரையும் விமர்சிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதியக்கோரிய வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும்,அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரியும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களை நீக்கும்படி சமூக வலைத்தளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, நீதிபதி கர்ணனின் செயல்பாடு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்ததுடன், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை அவரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் நீக்கும்படி உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது நவம்பர் 6- ஆம் தேதி அளித்த புகாரில் வழக்கு பதியக்கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் இன்று (19/11/2020) விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருப்பதால், அதனுடன் இணைத்து விசாரிக்க பரிந்துரைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், சந்திரேகரன் ஆகியோர் ஆஜராகி, நீதிபதி கர்ணனை கைது செய்ய முடியாவிட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், அவரது வீடியோக்களை அப்லோட் செய்யும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பல வழக்கறிஞர்களும், தமிழக அரசும் மௌனம் காக்கிறது என வாதிட்டனர்.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா என்பவர் அளித்த புகாரில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பார் கவுன்சிலின் புதிய வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்குடன் இணைத்து விசாரிக்க தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT