ADVERTISEMENT

உணவைத்தேடி சாலை ஓரம் வரும் காட்டுயானைகள் - அபாயத்தை உணராமல் 'செல்பி' எடுக்க ஓடும் பொதுமக்கள்!

12:02 PM Dec 08, 2019 | Anonymous (not verified)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வசிப்பதற்கு மேம்பட்ட சூழல் கொண்ட பகுதியாக உள்ளது. இதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தை இணைக்கும் சாலை உள்ளது. இந்த வழியாக லாரியில் செல்லும் கரும்பு ஊழியர்கள் சில கரும்புக் கட்டுகளை யானைகள் சாப்பிடுவதற்காக சாலையோரம் வீசி செல்கின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதன் காரணமாக யானைகள் சாலை ஓரங்களில் வருவது அதிகரித்துள்ளது. அப்படி வரும் யானைகள் சாலையின் நடுவே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

நேற்று காலை 11 மணியளவில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள வனப்பகுதியில் திம்பம் மலை அடிவாரபாலத்தின் அருகே ஒற்றை யானை, சாலையின் நடுவே நின்றுகொண்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை அருகே வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். அதுமட்டும் இல்லாமல் சில வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் யானையை பார்த்த ஆர்வத்தில் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு ஆபத்தை உணராமல் செல்போன்களில் படம் பிடிக்கின்றனர்.

இந்நிலையில் பண்ணாரியில் இருந்து தொடங்கும் வனப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT