sathyamangalam forest

ஒரு காலத்தில் சத்தியமங்கலம் காடு என்றால் அது 'வீரப்பன் காடு' என அழைக்கப்பட்டது. வீரப்பன் வாழ்வியல் காலம் இருந்தவரை காட்டுக்குள் விலங்குகள், மற்றும் இயற்கை கொள்ளை என்பது முழுவதுமாக தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது வனப்பகுதியில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டது என்று வனத்துறையினரே கூறுகிறார்கள்.

Advertisment

ஈரோடு மாவட்டம் தூக்கநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானைகள், காட்டெருமை, சிறுத்தை, புலிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் வெளி ஆட்கள் வனப்பகுதிக்குள் செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூக்கநாய்க்கன்பாளையம் வனப்பகுதிகளில் அடிக்கடி யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்குத்தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து கணக்கம்பாளையம் பிரிவில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் பாரஸ்டர் ஆறுமுகம், கார்டுகள் பாலமுருகன், சுரேஷ், பழனிச்சாமி ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

Advertisment

sathyamangalam forest

அப்போது அவ்வழியாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை பிடித்து அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இரண்டு தந்தங்கள்இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொட்டகோம்பை மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அந்தியூர் பூனாட்சியைச் சேர்ந்த அங்கப்பன், ஆண்டவன், கோவிந்தராஜன் என்பதும், அந்த வனப்பகுதிக்குள் வயது முதிர்ந்த யானை ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்த பழனிச்சாமி அவரது நண்பர்களுடன் யானை தந்தங்களை வெட்டி எடுத்து விற்பனைக்காக டூவீலரில் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 அடி நீளமுள்ள இரண்டு யானை தந்தங்கள், மற்றும் அவர்களின் இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்த சம்பவமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பிச் செல்ல முற்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் துர்சனாம்பாளையத்தைச் சேர்ந்த சிக்கணன், வெள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த வீரபத்தரன் என்பதும், இவர்கள் வனப்பகுதியில் இருந்து சந்தன மரத்தை வெட்டி கர்நாடகா மாநிலத்திற்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 5கிலோ சந்தன கட்டையைப் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இச்சம்பவங்கள் ஒருபுறமிருக்க வனத்துறையினர் மீதேமலை மக்கள் வேறுவிதமாக குற்றம்சாட்டுகிறார்கள். ''இந்தக் காட்டுக்குள் அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள் பலருக்கும் காடு, தோட்டம் மட்டுமல்ல தங்கும் விடுதிகளும் உள்ளது. இவர்களுக்கு வனத்துறையினர் வேண்டிய எல்லா வசதிகளும் செய்கிறார்கள். சந்தன மரம் மட்டுமல்லாமல் தேக்கு, ஈட்டி போன்ற உயர்ரக மரங்கள் வனத்துறை உதவியுடன் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. யானை தந்தம், புலிகள், சிறுத்தைகளின் பல் மற்றும் நகங்களும் விற்பனைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைக்காதமலை வாசிகள் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள்" என்கிறார்கள். எது எப்படியோ வீரப்பன் இல்லாத தைரியத்தில் 'காட்டுக் கொள்ளை' தொடங்கி விட்டது என அப்பகுதி மக்கள் முணுமுணுக்கிறார்கள்.