ADVERTISEMENT

வெள்ள நிவாரணப் பணிகள்; மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

04:34 PM Dec 22, 2023 | prabukumar@nak…

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல். சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் டி. கார்த்திகேயன் - மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கும்; சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது ஏரல் - ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர போக்குவரத்துக் கழகம் சென்னை லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் - கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், கொற்கை, உமரிக்காடு, மேல மங்கலக்குறிச்சி, பழையகாயல், முக்காணி பகுதிக்கும்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் - ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும்; பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா - வரதராஜபுரம், சிவராம மங்கலம், அப்பன் திருப்பதி, குலசேகர நத்தம், சாமி ஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு பகுதிக்கும்; நகராட்சி நிர்வாகம் இயக்குநர் சிவராசு - திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்கும்; வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் - வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால். மேல ஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புரனமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT