ADVERTISEMENT

"சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

08:21 PM Jun 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15- ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 277 இயந்திரப் படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட 1763 நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி தடை காலம் வரும் ஜூலை 15- ஆம் தேதி முதல் முடிவடைய உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்காக தங்களது படகுகளை தயார்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் அரசாணைப்படி சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணிப் பாதுகாப்பதற்கும் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் சுருக்குமடி தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து கடலூர் மாவட்ட கடல் பகுதியிலும், மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமுகமான மீன்பிடிப்பு முறைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை மீறி யாரேனும் கடலூர் மாவட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்யப்படும். மேலும் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைக் கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களை கொள்முதல் செய்யும் மீன் விற்பனையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT