cuddalore collector talk about annamalai university

Advertisment

சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாட்சியார் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார். மாணவர் உதவி மற்றும் முன்னேற்றமைய இயக்குநர் பேராசிரியர் தெய்வசிகாமணி அனைவரையும் வரவேற்றார். சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு 115 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் என 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றுவழங்கி பாராட்டினார்.

இதனைத்தொடந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “இந்த ஊக்கத்தொகையைமாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் கடலூர் மாவட்டம் பெருமை பெற்றுள்ளது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் சிறப்பான கல்வியைப் பெற தமிழக முதலமைச்சர் நான் முதல்வன் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்கும் போதே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்பண்புகள் இல்லாத கல்வி சமுதாயத்திற்கு பயன்படாது. மாணவர்கள் கல்வி பயில பெற்றோர்களின் ஒத்துழைப்பு மற்றும் நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டும்” எனப் பேசினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தின சம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.