ADVERTISEMENT

கடன் பிரச்சனை; மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை

01:23 PM Nov 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் சரகம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(45). இவரது மனைவி பிரபாவதி(32). இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிதம்பரம் புறவழிச்சாலை, தாயம்மாள் நகரில் குடியிருந்து வருகின்றனர். கணேஷ் சிதம்பரம் பொய்யாப்பிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே வி.எஸ்.கே. என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி இரவு வியாபாரத்தில் கடன் அதிகமாகி நஷ்டம் ஏற்பட்டதால் திராட்சை ஜூஸில் எலி பேஸ்ட்டை கலந்து மனைவி பிரபாவதி மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் தெரியாமல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று (24.11.2022) காலை 11 மணியளவில் அனைவரும் வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் மனம் உடைந்த கணேஷ், புதுச்சத்திரம் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்திற்குச் சென்று, பி.முட்லூரில் எம்ஜிஆர் சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்ற தனது நண்பருக்கு வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு வியாபாரத்தில் கடன் அதிகமாகி விட்டதாகவும், எனது சாவுக்கு சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் (அதிமுக), தச்சம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் டி.எம்.ஆர். சகோதரர்கள் ஐவர் மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர்தான் காரணம் என்று தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கணேஷ் அனுப்பிய ஆடியோவைக் கேட்ட அக்பர் அலி, கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். கணேஷை தேடிச் சென்ற போது அன்னப்பன்பேட்டை அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட மூவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணேஷ் தனது சட்டை பாக்கெட்டில், எனது மரணத்திற்குக் காரணம் சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.எம்.ஆர். சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன்(பாஜக) மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் பற்றியும் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தார். போலீசார் அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT