ADVERTISEMENT

‘விவசாயிகளுக்கு நிவாரண நிதி’ - அரசாணை வெளியீடு

09:47 PM Feb 24, 2024 | prabukumar@nak…

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. அதாவது தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி (21.12.2023) பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1 லட்சத்து 64 ஆயிரத்து 866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்து 174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும்., 38 ஆயிரத்து 840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62 ஆயிரத்து 735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 இலட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT