ADVERTISEMENT

“தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவிக்க வேண்டும்” - உயிர்ம வேளாண் கொள்கை மாநாட்டில் கோரிக்கை! 

03:26 PM Aug 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பெண்ணாடத்தில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரி தமிழர் மரபு வேளாண்மை மாநாடு நடைபெற்றது. செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் தலைமையில், தமிழக உழவர் முன்னணி தலைவர் சி. ஆறுமுகம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தமிழக உழவர் முன்னணி தி.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அறிமுகவுரையாற்றினார்.

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் நீடித்த வேளாண்மை மையத்தின் செயல் இயக்குநரும், தெலுங்கானா – ஆந்திரா மாநிலங்களில் 35 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்து வருபவருமான முனைவர் ஜி.பி.இராமாஞ்சநேயலுக்கு, நீடித்த வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி காந்திய பொருளாதார அறிஞர் “ஜே.சி.குமரப்பா நினைவு விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் மாநாட்டு சிறப்புரை நிகழ்த்தினார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சுயாட்சி இந்தியா தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாமயன், தமிழக உழவர் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சுயாட்சி இந்தியா கட்சியின் அனைத்திந்திய தலைவரும், தில்லி உழவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான முனைவர் யோகேந்திர யாதவ்வின் வாழ்த்துச் செய்தி காணொளி வாயிலான மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. வேளாண் பொருளியல் ஆய்வறிஞர் அரியானாவை சேர்ந்த முனைவர் தேவேந்திர் சர்மாவின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.


தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி, செந்தமிழ் மரபு வேளாண்மை நடுவம் கவிஞர் சிலம்புச்செல்வி, தாளாண்மை உழவர் இயக்க க.வே.நடராசன், பழமலை மரபுவழி வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் மற்றும் க.சரவணன், ஈரோடு மாவீரன், பேராசிரியர் சௌ.காமராசு, சீர்காழி பொற்கொடி சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


காரைக்கால் பாஸ்கரின் மரபு விதைக் களஞ்சியம், தமிழர் மரபு உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றன. செ. கணேசன் நன்றியுரையாற்றினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மா.மணிமாறன், சி. பிரகாசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


மாநாட்டில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாப விலையை அடிப்படை விலையாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் உள்ளதை பின்பற்றி தமிழ்நாட்டில் உழவர்களுக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய் வீதம் நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உழவர்களும், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், "உயிர்ம வேளாண்மை மாநாட்டின் நோக்கம் நமக்கு அண்டை மாநிலமாக இருக்கின்ற ஆந்திரா, கேரளா அரசுகளை போல தமிழ்நாடு அரசும் உயிர்மை வேளாண்மையை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், இயற்கை வேளாண்மையில் விளையக்கூடிய விளைபொருள்களுக்கு, லாபகரமான விலை கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யவும் வேண்டுமென்பதற்கான சிறப்பு கொள்கையை அறிவிக்க வேண்டும், இயற்கை வேளாண்மையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும். அச்சட்டம் செயல்படுவதற்கு வாரியம் அமைக்க வேண்டும். ஒன்றிய அளவில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்" எனக் கூறினார்.


ஆந்திர பிரதேச வேளாண் அறிவியலாளர் இராமாஞ்சநேயலு கூறும்போது, "ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள உழவர்களை திரட்டி இயற்கை வேளாண்மை பயிற்சி கொடுத்து கிட்டத்தட்ட 2024லிருந்து 2026க்குள் எல்லா மாநிலங்களிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்ற முறையில் திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவும் அதற்கான உதவி செய்து வருகிறார்கள். சிக்கிம் முற்றிலுமாக இயற்கை வேளாண்மை மாநிலமாக மாறி உள்ளது. இப்படி மாறுவதுதான் உழவர்கள் நஞ்சு இல்லாத உணவு, லாபகரமான விளைபொருளுக்கான விலை இதை நோக்கி நகர்ந்து வருகிறோம். இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஆந்திரா போன்ற அரசாங்கங்கள் ஆதரவு தருகிறார்கள். இது போதாது, இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும், நகர்புறத்தில் உள்ள நுகர்வோர்களை ஒரு கூட்டுறவாக உருவாக்கி, உழவர்களை நேரடியாக இணைப்பதற்கான வழிமுறையை செய்து வருகிறோம். மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது. வேளாண்மை ஒரு லாபகரமான தொழிலாக உழவர்களுக்கு மாறுகிறது. இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். இந்திய அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நேரடியான வருமானம் என்பதை பரவலாக்க வேண்டும். இந்தக் கொள்கை அறிவிப்புகளை இந்திய அரசின் கொள்கை அறிவிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக உழவர்களை ஒன்றிணைக்கிறோம்" என்றார்.


முன்னதாக உழவர் போராளி தூருவாசன் மற்றும் டெல்லி உழவர் போராட்ட ஈகியர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்பட பாடலாசிரியர் கவிபாஸ்கரின் கவிவீச்சும், பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறை இசையும் நடைபெற்றன. மேலும் மரபு வழி வேளாண்மை, இயற்கை விவசாயம் குறித்த நூல்கள், மரபுவழி விதைகள், மரபு வழியிலான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT