ADVERTISEMENT

விவசாயிகளின் நகை கடன் வட்டி மானியத்தை ரத்து செய்வதா? வைகோ கண்டனம்

01:47 PM Dec 20, 2019 | rajavel

ADVERTISEMENT

விவசாய நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தைத் திடீரென்று ரத்து செய்து இருப்பது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் என்று ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றன. இந்தக் கடன்கள், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.



இந்தக் கடன் திட்டப்படி விவசாயிகளுக்கு நகைக் கடன் 11 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், மத்திய அரசு 4 விழுக்காடு மானியமாக வங்கிகளுக்கு அளிப்பதால் நகைக்கடன் வட்டி என்பது 7 விழுக்காடு மட்டுமே.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க் கடன்களை உரிய கால கட்டத்தில் திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்குக் கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு என்ற குறைவான வட்டி விகிதத்தில் நகைக்கடன் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம், தற்போது 4 விழுக்காடு வட்டி மானியத்தைத் திடீரென்று ரத்து செய்திருப்பதால் விவசாய நகைக்கடன் வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 11 விழுக்காடாக அதிகரித்து விடுகிறது. விவசாய நகைக் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்று புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய அரசு இதற்குக் காரணம் கூறுகிறது.

விவசாய நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தைத் திடீரென்று ரத்து செய்து இருப்பது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் ஆகும். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. விவசாயிகள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கி வாழ்வாதாரத்தையே பறிகொடுக்கும் நிலைமையை அரசே உருவாக்குவது அநீதியாகும்.


விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட பா.ஜ.க. அரசு, நகைக் கடன் வட்டி மானியத்தையும் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மத்திய அரசு, வேளாண் துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்து, விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழி வகை செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT