விவேகானந்தர் மையங்களில்மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலகம் முழுவதும் அவர் புகழ் பரவக் காரணமாக இருந்தது. “அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்று விளித்த விவேகானந்தரின் வார்த்தை அந்த மாநாட்டையே உலுக்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko_70.jpg)
விவேகானந்தருக்கு புகழ் மகுடம் சூட்டிய சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் அவர் உரையாற்றுகின்ற உயர்ந்த வாய்ப்பை வழங்கிய பெருமை இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களையேச் சாரும்.
விவேகானந்தர் மதுரை வந்திருந்தபோது அவரது உரையைக் கேட்ட மன்னர் பாஸ்கரசேதுபதி, விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தமிழ், ஆங்கிலப் புலமையும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரும் ஆவார். எனவேதான் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு உலக சமய மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தது.
அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்க தமக்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், தம்மைவிட விவேகானந்தர் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் என மன்னர் பாஸ்கர சேதுபதி கருதினார்.
எனவே விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரின் எழுச்சிமிக்கச் சொற்பொழிவு இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் கீர்த்தி பெற செய்தவர் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆவார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விவேகானந்தர் பாம்பன் துறைமுகத்தில் வந்து இறங்கினார். அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகாந்தரின் பாதங்களை தரையில் படவிடாமல் தன் சிரசில் வைத்து இறங்குமாறு கேட்டுக்கொண்டாராம்.
மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ராஜரிஷி என்று விவேகானந்தர் அழைத்தார்.
விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாச்சார மையங்கள் அனைத்தும் விவேகானந்தர் மையங்களாக பெயர் மாற்றப்பட்டது.
அந்த மையங்களில், விவேகானந்தர் பெருமை பெற்றதற்குக் காரணமாக இருந்த இராமராதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் திருஉருவப் படத்தையும் இடம்பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)