ADVERTISEMENT

கொள்ளையடிக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்! விவசாயிகள் குற்றச்சாட்டு!

01:17 PM Feb 18, 2019 | selvakumar


ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பான சாகுபடி அளவை எட்ட முடியாத நிலையே கடந்த 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2018 சம்பா பருவத்திலும் இதே நிலமையே நீடித்தது, மழைநீரைக்கொண்டும், கிடைத்த ஆற்றுநீரைக்கொண்டும் தாமதமாகவே சாகுபடி செய்திருந்தனர்.

கஜா புயலால் நெற்பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு, எஞ்சிய பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இயல்புக்கு மாறாகவே, மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாகை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகையை தாமதமாக வழங்குவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் பணியில் உள்ள ஊழியர்களோ கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதம் எடை போடுவதற்கு முன்பாகவே கேட்கின்றனர், கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்துவருவதாக விவசாயிகள் வேதனை அடைகிறார்கள்.

இதுகுறித்து நாகை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தாததால் எங்களுக்கு பெரும் பணத்தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் ஒவ்வொன்றிலும் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 800 சிப்பம் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. இன்னும் கூடுதலாக நாளொன்றுக்கு ஆயிரம் சிப்பங்களாக கொள்முதல் செய்ய வேண்டும்" என்கிறார்.



அவரே மேலும்," நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் எடை வைப்பதற்கு முன்பாகவே பணம் வாங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏனென்றால் அவர்களும் கையூட்டு பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளிக்கின்றனர். மூட்டைக்கு ஒரு ரூபாய் 60 பைசா மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய கூலியாக அரசு கொடுக்கிறது. அது போதாததால் எங்கள் நெல்லில் கையை வைக்கிறார்கள். இது அரசு செய்யும் மிகப்பெரிய தவறு. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல்லுக்கு 1840ம் நெல்லுக்கு 1,800 ரூபாய் வீதமும் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல் ரகங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று காயவைத்து, தூசு நீக்கி சுத்தப்படுத்தி வழங்குகிறோம். இத்தகைய சூழ்நிலையிலும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எவ்வளவு எடை வைக்கப்படுகிறதோ கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். அந்த தொகையை தருவதற்கு தாமதப்படுத்தி முறையிட்டால் நெல்லை எடுக்க காலதாமதம் செய்கின்றனர். மேலும் தரமற்றவையாக உள்ளன எனக் கூறி வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை உடனடியாக வழங்குவதில்லை. கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் கூடுதல் சுமையை ஏற்கவேண்டிய நிலையே உள்ளது" என்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "அவர்கள் அனைவரும் ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பதில்லை, வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர். அதோடு வங்கி ஆவணங்கள் முறையாக சரிபார்த்த பின்னரே தொகை செலுத்தப்படுகிறது. மற்றபடி தாமதம் ஆகவில்லை. குற்றங்களை கண்டு பிடிக்க தனிப்படைகள் அமைத்து குற்றங்களை தடுத்துவருகிறோம்" என்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT