ADVERTISEMENT

நிலத் தகராறில் விவசாயி மரக்கட்டையால் அடித்துக் கொலை; தம்பி மகன் வெறிச்செயல்! 

10:24 AM Apr 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே, நிலத் தகராற்றில் விவசாயியை அவருடைய தம்பி மகனே மரக்கட்டையால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (60). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகேசனின் தம்பி, பாதர். இவருடைய மகன் தினேஷ்குமார் (31). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் பொதுச் சொத்தாக 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக அவர்களிடையே பல ஆண்டாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், முருகேசனின் தம்பி பாதர், மகன் தினேஷ்குமார் ஆகியோர் ஏப். 4 ஆம் தேதி, நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக முருகேசன் மற்றும் அவரது தரப்பினரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட பாதர், சொத்துப் பிரச்சனையை சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவரை அழைத்துள்ளார்.

இதை நம்பிய முருகேசன், ஏப். 6 ஆம் தேதி மாலை, பேச்சுவார்த்தைக்காக நாரைக்கிணறுக்குச் சென்றுள்ளார். அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த மரக்கட்டையால் முருகேசனை சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் ஏப். 7 ஆம் தேதி அதிகாலை இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசனின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்பிறகு, முருகேசனின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்தனர். அவரை ராசிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். நிலப் பிரச்சனையில் தம்பி மகனே, பெரியப்பாவை அடித்துக் கொலை செய்த சம்பவம், நாமகிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT