ADVERTISEMENT

பழிவாங்குவதற்காக விவசாயி மீது பொய் வழக்கு? கைதினை கண்டிக்கும் உறவினர்கள்!

10:51 AM Mar 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடைசி விவசாயி படத்தில் மயிலைக் கொன்றதாக விவசாயி ஒருவர் மீது பொய்வழக்கு புனையப்பட்டு நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி விசாரணை நடக்கும். அந்த காட்சியைப் போலவே மூன்று மயில்களைக் கொன்றதாக பொய்வழக்கில் விவசாயியை கைது செய்ததைக் கண்டித்து வனத்துறையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே எழுமகளூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயசீலன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மூன்று மயில்களை கைப்பற்றி வயலின் உரிமையாளர் ஜெயசீலனை கைது செய்தனர்.

விளைநிலத்தில் பயன்படுத்திய குருனை மருந்தால் மயில்கள் இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த ஜெயசீலனின் உறவினர்கள் தங்கள் கிராமத்தில் சாராய விற்பனையை ஜெயசீலன் தடுத்ததால், பாதிக்கப்பட்ட சாராய வியாபாரி மணிவண்ணன் என்பவர் திட்டமிட்டு மயில்களைக் கொன்று ஜெயசீலன் வயலில் வீசிச் சென்றதாகவும், இதனை விசாரிக்காமல் விவசாயி மீது வனத்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்ததாகவும் கூறி, அவரை விடுதலை செய்ய வேண்டும் என வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT