ADVERTISEMENT

படித்தது பத்தாவது... பார்த்த வேலை டாக்டர்... அடுத்தடுத்து சிக்கிய போலி டாக்டர்கள் அதிர்ச்சி சம்பவம்!

02:36 PM Nov 06, 2019 | Anonymous (not verified)

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் தீவிரமாக பரவிய மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலில் 5 பேர் இறந்தனர். இந்நிலையில் போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தயாளன் தலைமையில் போலி டாக்டர்களை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையில் நேற்று மருத்துவ குழு பள்ளிப்பட்டு நகரி சாலையில் சோதனை செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கணவன், மனைவி உள்பட 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கிராந்தி. இவர்கள் வீட்டின் முன்புறம் மருந்து கடை நடத்தி வந்தனர்.மேலும் வீட்டில் இவர்கள் இருவரும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருந்து கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அறையில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான ஊசிகள், மருந்துகள் கிடைத்தன. மேலும் முரளியும், அவரது மனைவி கிராந்தியும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர்களான முரளி, கிராந்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

ADVERTISEMENT



இதேபோல் மாவட்ட சுகாதாரத்துறை காசநோய் பிரிவு துணை இயக்குனர் லட்சுமி முருகன் தலைமையிலான குழுவினர் திருத்தணியில் உள்ள அமிர்தாபுரம் திருவள்ளுவர் தெருவுக்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வீட்டில் வசித்து வந்த வேளாங்கண்ணி என்பவர் லேப் டெக்னிசியன் படித்து விட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் வேளாங்கண்ணியை திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் வேளாங்கண்ணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பழவேற்காட்டில் 40 ஆண்டு காலமாக சக்தி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி மருத்துவர் என்று பொதுமக்களை ஏமாற்றிய சென்னை எர்ணாவூர் பாரதி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் பழனிச்சாமி என்பவரை மாவட்ட சுகாதாரத் துறையினர் திருப்பாலை வனம் காவல்துறையனருடன் சென்று கைது செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT