ADVERTISEMENT

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்க கண்காட்சி; 10 நாள்கள் நடத்த ஏற்பாடு!

08:00 AM May 05, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சிகள், துறை வாரியான சாதனைகள் குறித்த கண்காட்சிகள் சேலத்தில் வரும் மே 7- ஆம் தேதி முதல் பத்து நாள்களுக்கு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளடக்கிய 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி' புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (மே 4) நடந்தது. அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்து, பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று மே 6- ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, வரும் மே 7- ஆம் தேதி, அரசின் ஓராண்டு சாதனைகள், திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து 10 நாள்களுக்கு அரசின் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

துவக்க நாளன்று, ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்படும். அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சிகள், பல்துறை பணி விளக்க முகாம்கள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அரசின் நலத்திட்டங்களை மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் எஸ்டி நலத்துறை சார்பில் கொளத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் சாதிச்சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்ட சான்றுகளை பெறும் வகையில் வருவாய்த்துறையினர் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் அனைத்து வட்டாரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும். போட்டித்தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் மண் பரிசோதனை சிறப்பு முகாம், கோடை காலங்களில் கால்நடைகளை நோய் தாக்கத்தில் இருந்து பராமரிப்பது தொடர்பான முகாம், உணவுப்பாதுகாப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

மரக்கன்றுகள் நடப்படும். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் நடத்தப்படும். அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணிகளை சிறப்பாக செய்தி வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT