ADVERTISEMENT

ஆறு, ஏரி, குளங்கள் மறுபடியும் மாசுப்பட்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்: ஈஸ்வரன்

04:06 PM May 07, 2020 | rajavel



கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆறு, வாய்க்கால்கள், ஏரி, குளங்கள் மாசு இன்றி சுத்தமானது. மறுபடியும் மாசுப்பட்டால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றால் இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கினால் கங்கை, கோதாவரி, காவிரி, அமராவதி, பாலாறு, பவானி, நொய்யல் மற்றும் நாடு எங்கும் இருக்கின்ற ஆறுகளும், காலிங்கராயன் வாய்க்கால் போன்ற நீர்நிலைகளும் மாசு இல்லாமல் சுத்தமாக மாறியிருக்கிறது.

முழு ஊரடங்கினால் எந்தவொரு தொழிற்சாலையும் இயங்கவில்லை. அதனால் தொழிற்சாலை கழிவுகள் ஆறுகளில் கலக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கழிவுகளால் மாசடைந்து இருந்த ஆறுகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. மக்கள் குடிக்க ஏற்ற நீராகவும் மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் தற்போதுள்ள தூய்மையான, சுத்தமான நிலையில் எப்போதும் இருக்கவே மக்கள் விரும்புகிறார்கள்.

ஆறுகளும், நீர்நிலைகளும் மாசடைவதற்கு தொழிற்சாலைகள் எந்தவொரு கட்டுபாடுமின்றி கழிவுகளை வெளியேற்றுவதே முக்கிய காரணம். ஆறுகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை தெளிவாக இயங்கவில்லை. இப்போது கரோனா நமக்கெல்லாம் கற்று தந்த படிப்பினையை ஏற்று எதிர்கால சந்ததிகளுக்கு மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கி தந்திட வேண்டும்.

ஆற்று ஓரங்களில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்ற அனுமதிக்க கூடாது. கங்கையை சுத்தம் செய்ய மத்திய அரசு பல கோடி ரூபாயை செலவு செய்தும் சுத்தமாக்க முடியவில்லை. கங்கை, காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசினால் செய்ய முடியாதது கரோனா ஊரடங்கினால் இவையெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.

ஆற்று ஓரங்களில் உள்ள தொழிற்சாலைகளால் தான் ஆறுகள் மாசடைகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இனியும் தூங்குவது போல் நடிக்க கூடாது. ஊரடங்கு தளர்வினால் படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க போகிறது. மீண்டும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இனி எந்தவொரு தவறும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆறுகள், நீர்நிலைகள் இப்போதிருக்கும் நிலையை தமிழக அரசு வீடியோ பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு நடத்த முன்வர வேண்டும். ஆறுகள், நீர்நிலைகளை தூய்மையாக பராமரிக்க தேவையான உத்தரவுகளை தமிழக முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். இயற்கை மக்களுக்கு கொடுத்த கொடையை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT