Skip to main content

ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்... தமிழகத்திற்கு நல்லதல்ல... கொமதேக ஈஸ்வரன் 

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் துறை வாரியாகவும், அரசின் திட்டங்களுக்காகவும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்து இருக்கிறார்கள். தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

 

Every year scarcity budget .. not good for Tamil Nadu ... kmdk Eswaran

 

ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்து தமிழக அரசின் கடன் சுமையை அதிகரிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. நிதி வருவாயை அதிகரிப்பதற்கும், நிதி பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற காலங்களில் மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியே இருக்காது. கடன் வாங்கி கொண்டே செல்வதை தவிர்த்து வேறுவழியில்லை. இன்னும் சில வருடங்களில் தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று போராடும் நிலை உருவாகும். அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.