ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மோடி, அமித்ஷாவும் அழைத்து பேச வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

05:28 PM Feb 20, 2020 | rajavel

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் அழைத்து பேசி அவர்கள் கருத்துக்களையும் கேட்டு பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக கொண்டு வந்திருக்கின்ற குடியுரிமை சட்டத்தினால் மத்திய அரசுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற எதிர்ப்பு எண்ணங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அதிக பாதிப்புக்கு உள்ளாகின்ற இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டங்களை இந்தியா முழுவதும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவர்கள் நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவர்களை அழைத்து பேசி இருக்கலாம் அல்லது எல்லாரும் ஏற்றுக்கொள்கின்ற அளவில் மாற்றத்திற்கு அச்சட்டத்தை உட்படுத்தி இருக்கலாம். அரசு தரப்பில் இந்த பிரச்சினைகளை பெரிதாக்க விரும்புகிறார்கள் என்பது நடவடிக்கைகள் மூலமாக தெரிகிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை. ஆனால் மத்திய அரசு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை போல இதை உருவகப்படுத்த முயற்சிக்கிறார்கள்.


அது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பரவ விடுகிறார்கள். அதன் மூலம் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் வன்முறை உருவாக வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அனைத்துத்தரப்பினரும் இதை புரிந்து கொண்டு அமைதியான முறையில் போராட்டங்களை ஜனநாயக முறையில் காட்ட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் வன்முறை ஊடுருவ விட்டுவிடக்கூடாது. குடியுரிமை சட்டம் அமல்படுத்துகின்ற முயற்சியினால் ஏற்பட்ட போராட்டங்கள் உலகளவில் இந்தியா உடனான வர்த்தகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் சந்திக்கின்ற மந்தநிலையிலிருந்து மீள வேண்டுமானால், சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்ற தொழில்துறை மீண்டு எழ வேண்டுமானால் அமைதியான சூழல் வேண்டும். இந்திய ஏற்றுமதிக்கான விசாரணைகள் பல நாடுகளிடமிருந்தும் இச்சூழலில் குறைந்து வருகிறது. எந்த இனமாக இருந்தாலும் தங்களுடைய இனத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் போராட தான் செய்வார்கள்.




இலங்கையில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் கண்டன குரலை ஓங்கி ஒலிக்கத்தான் செய்வோம். தமிழகத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. இங்கு ஏன் போராட்டம் நடத்த வேண்டுமென்று யாரும் கேட்க முடியாது. அதேபோல குடியுரிமை சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி அவர்கள் கருத்துக்களையும் கேட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும். தாமதம் ஆக ஆக அதிகமாக பாதிக்கப்படுவது இந்திய தொழில்துறை தான். தொழில்துறை பாதிப்படைவதால் கோடிக்கணக்கான பேர் வேலை இழந்து வருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருப்பது கண்டிப்பாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது. அரசாங்கம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளாமல் இந்துக்களை தூண்டிவிட்டு நீங்கள் எதிர்த்து போராடுங்கள் என்கிற முறையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரவ விடுவது வன்முறைக்கு வித்திடுவதாக அமையும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT