ADVERTISEMENT

விஜயகாந்த் இறுதிச் சடங்கு; பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

02:01 PM Dec 29, 2023 | ArunPrakash

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, தீவுத்திடலிலிருந்து 2.15 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், தாமதமாக இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி; பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT