ADVERTISEMENT

புதுக்கோட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்... குளங்களை சீரமைத்த இளைஞர் குழுவினர் கலெக்டரிடம் மனு!

11:48 PM Jun 27, 2019 | kalaimohan

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி, குளமங்கலம், வடகாடு, மாங்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. அதனால் மேலும் நிலத்தடி நீர் கீழே சென்றுவிடாமல் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் சொந்த செலவில் நீர்நிலைகளையும், வரத்துவாய்க்கால்களையும் சீரமைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொத்தமங்கலத்தில் அம்புலி ஆறு அணைக்கட்டில் தொடங்கி கிராமத்தில் உள்ள முக்கிய குளங்கள், வரத்துவாய்க்கால்களை கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் தொடர்ந்து 47 வது நாளாக சீரமைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும், வரத்து வாய்க்கால்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் தண்ணீர் வரத்து மற்றும் தண்ணீர் தேக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் நீர்நிலை மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றித் தரவேண்டும் என்று குளங்களை சொந்த செலவில் சீரமைத்து வரும் இளைஞர் மன்றத்தினர் புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் உமாமகேஸ்வரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மேலும் மேலும் குளங்களின் வரைபடங்கள், அதன் பரப்பளவுகள் பற்றிய விபரங்களை அறிய வருவாய் துறைக்கும் அதற்காண பணம் செலுத்தி உள்ளனர்.

கலெக்டரை சந்தித்த குழுவினர் கூறும் போது..

கொத்தமங்கலத்தில் முன்மாதியாக அனைத்து குளங்களையும் தூர்வாரி வருகிறோம். ஆனால் தனி நபர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் எங்கள் குழுவினர் அதனை அகற்ற முடியாத நிலையில் இருந்தோம். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்த வருவாய்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரிடமோ, வருவாய்துறையிடமோ மனு கொடுத்தால் உடனே அகற்றிக் கொடுக்கப்படும் என்று பேசினார். அதன் அடிப்படையில் தான் மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம். மனுவை படித்துப் பார்த்த கலெக்டர் எங்களை பாராட்டியதுடன் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதே மனுவை வருவாய்துறை நிர்வாக ஆணையம் மற்றும் அமைச்சர்களுக்கும், எங்கள் குழுவினர் நேரில் சந்தித்து கொடுக்க இருக்கிறோம் என்றனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பருவமழை பெய்யும் போது நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கலாம் என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT