தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் மேல ஒட்டங்காடு. விவசாயிகள் நிறைந்த கிராமம் விவசாயம் என்பதைவிட விவசாய கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஊர். அந்த ஊரில் அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து படிப்பிற்கே படாதபாடுபட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று அந்த பணத்தில் படித்து பட்டம் வாங்கி பெயருக்கு பின்னால் சில எழுத்துகளை போட்டுக் கொண்டதோடு நின்றுவிடாமல் தன் தாய், பாட்டியின் கீற்று பின்னும்உழைப்பில் கிடைத்த வருமானத்திலும் வாரத்தில் இரு நாட்கள் ரயிலேறி சென்னை பட்டணம் போய் முதல் நாள் பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு அறை எடுத்து தங்கினால் பணம் வேண்டுமே என்று ரயில் நிலையத்திலேயே ஒரு இரவை கழித்துவிட்டு மறுநாளும் வகுப்புக்கு போய் மாலை ரயிலேறி கல்லூரி விடுதிக்கு வந்து கல்லூரி படிப்பையும் தொடர்ந்து நண்பர்களின் உதவியோடு கடும் உழைப்பும் முயற்சியும் பலன் கொடுக்க ஐஏஎஸ் தேர்ச்சியானார் சிவகுரு பிரபாகரன். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போல ஆக நினைத்தேன். கனவு நிறைவேறியது என்று மகிழ்ந்தார்.

Advertisment

எங்கள் கிராமத்தில் முதல் ஐஏஎஸ் என்று கிராமமே கொண்டாட வழக்கம்போல தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்தார்கள் சிவகுருபிரபாகரனின் தாயும் பாட்டியும். கனவு நிறைவேறியது இனி பயிற்சிக்காக அழைப்பார்கள் அதுவரை இன்ப சுற்றுலா போகலாம் என்று எண்ணாமல் தன் ஊருக்கு வந்து கிராமத்தில் படித்து பட்டம் வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்த பலருக்கு வகுப்பெடுத்து குரூப் தேர்வுகளை எழுத தூண்டி சிலரை அரசு வேலைக்கு அனுப்பியதுடன் சில மாதங்களை வீட்டிலேயே கழிக்காமல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராம அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். நீங்களும் என்னைப் போல ஐஏஎஸ் ஆக வேண்டும் அதற்கு நிறை புத்தகங்கள் படிக்க வேண்டும், தினசரி செய்தித்தாள் படிக்க வேண்டும் என்று சுமார் 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.

Advertisment

The collector wedding gift ...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் கிராம வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கிராம இளைஞர்களுடன் இணைந்து நின்று கேட்டவருக்கு..

Advertisment

இழந்த மரங்களை மீட்க வேண்டும் அதற்கு கிராமத்தில் மரக்கன்றுகள் நடவேண்டும், நீர்நிலைகளில்தண்ணீரை நிரப்ப வேண்டும். அருகில் உள்ள களத்தூர், போன்ற கிராமங்களில் இளைஞர்களே இந்தப் பணியை செய்து சாதித்துள்ளார்கள். கீரமங்கலம், கொத்தமங்கலம், ஏம்பல் போன்ற கிராமங்களில் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள் என்றோம். அடுத்த நாளே இளைஞர்களை இணைத்து அப்துல் கலாம் கிராமவளர்ச்சிக் குழுவை உருவாக்கி பல வருடங்களாக மராமத்து செய்யப்படாத பெரிய ஏரியை மராமத்து செய்து குருங்காடுகள் அமைத்து மரக்கன்றுகளை நட்டார்.

திருநெல்வேலியில் சார் ஆட்சியர் என்றாலும் விடுமுறை நாட்களில் கிராமப்பணிகள். விவசாயத்திலும் ஆர்வமாக இருந்ததால் தென்னைக்குள் ஊடுபயிர் செய்ய அனுபவமிக்க விவசாயிகளிடம் நேரில் சென்று அனுபவங்களைக் கேட்டு மண்ணுக் கேற்ற பயிர் செய்யும் பணியையும் செய்ய தொடங்கினார். மிளகு நாற்று அவரது தென்னை மரங்களில் படர காத்திருக்கிறது.

இந்த சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் திருமணம் புதன் கிழமை பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் நடந்து ஒரு மண்டபத்தில் விருந்து நடந்த போது நாம் சக பத்திரிகை நண்பர்களுடன் சென்று விவசாயத்தின் மீது பற்றுக் கொண்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் - மருத்துவர் கிருஷ்ணபாரதி இணையருக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏர் கலப்பையை கல்யாணப் பரிசாக கொடுத்தோம்.

கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார் சார் ஆட்சியர். 2 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்குகிறோம் இதில் ஆயிரம் கன்றுகளாவது நிச்சயம் வளர்க்கப்படும் என்றார்கள் மணவீட்டு இளைஞர்கள்.

The collector wedding gift ...

கை நிறைய மரக்கன்றுகளை அள்ளி மார்போடு அனைத்துச் சென்ற பெண்மணி..

கலெக்டர் வீட்டு கல்யாணத்தில கொடுத்தாங்க என்று பெருமையாக சொல்லிக் கொண்டு சென்றார். தான் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்று தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்து செல்லும் பலர் மத்தியில் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனக்கு மனைவியாக வருபவரும் தன் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று மருத்துவரை கரம் பிடிக்கும் முன்பே.. வார விடுமுறை நாட்களில் கிராமத்துக்கு வந்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க மணமகளும் சம்மதம் என்றதும் கரம் பிடித்துள்ளார்.

இதேபோல ஊரை காதலிக்கும் மேலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக..வாழ்த்துகள் இணையர்களுக்கு.