ADVERTISEMENT

தேர்தல் திருவிழா! வாக்காளர்கள் குஷி!

06:43 PM Feb 19, 2022 | santhoshb@nakk…

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் 40- வது வார்டு, விஐபி வார்டு என்பதால், ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்வதில், போட்டா போட்டி. அ.தி.மு.க. தரப்பில் முந்திக் கொண்டு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்துவிட்டார்கள். அவர்களை துரத்திக் கொண்டு தி.மு.க. தரப்பில், அதே ரூபாய் 1000-ஐ அந்த வார்டு வாக்காளர்கள் அனைவருக்கும் தந்தனர். ஆனாலும், சம அளவில் பணப்பட்டுவாடா, யாருக்கு ஓட்டு போடுவது என முடிவெடுப்பதில் வாக்காளர்களின் மனதைக் குழப்பும் என்பதால், முந்தைய நாள் இரவு தி.மு.க. தரப்பு மீண்டும் ரூபாய் 500 தந்தது. அதிமுக தரப்பும் விடவில்லை அதே ரூபாய் 500 தந்தது, கூடவே ரூபாய் 400 மதிப்புள்ள சேலையும் தந்தது. மசாலா பொருட்களுக்கான வெற்றி கூப்பனும் தரப்பட்டுள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்து, வாக்காளர்கள் யாருக்கு குஷியாக ஓட்டு போடப் போகின்றார்களோ?

ADVERTISEMENT

வாங்கிய கூலிக்கு, கால் கடுக்க வீதியில், வெயிலில் நின்று எவ்வளவு நேரம்தான், இந்தச் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க, அந்தச் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று கூவியபடியே இருக்க முடியும்? தி.மு.க. தரப்பும் அ.தி.மு.க. தரப்பும், ஆங்காங்கே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு என்ன ஒரு நம்பிக்கையோ, பல இடங்களிலும் அசராமல் நின்றது. நாம் தமிழர் கட்சியினரும், ம.தி.மு.க.வினரும், சுயேச்சைகளும் தங்களால் முடிந்த அளவுக்கு, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிடம் கேன்வாஸ் செய்தபடியே இருந்தனர்.

ADVERTISEMENT

தேர்தல் சேவகர்கள் அனைவருக்கும் வெள்ளைச் சட்டை வாங்கிக் கொடுத்து அணியச் செய்து, தானும் வெள்ளைச் சட்டை போட்டிருந்தார், அ.தி.மு.க. வேட்பாளர் முனீஸ்வரன். மதியம் 02.00 மணி ஆகியும் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களை கைபேசியில் அழைத்து, ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடுக்கிவிட்டார்.

யார் மேயர்? யார் துணை மேயர்? யார் கவுன்சிலர்? என்று முடிவு செய்வது நாங்களே என, ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் கியூவில் நின்று வாக்களித்தனர். போட்டி போட்டு வாக்காளர்களுக்குப் பணம் தந்து ஓட்டு போடச் சொல்லி அழைப்பதும், மக்களில் சிலரும் பணத்துக்கு விசுவாசம் காட்டி வாக்களிப்பதும், என்ன ஜனநாயகமோ?

ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் திருவிழா நிறைவடைந்தாலும், ‘வெற்றி யாருக்கு?’ என்ற முடிவை எதிர்பார்த்து, வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் காத்திருக்க வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT