ADVERTISEMENT

மலைவாழ் மக்களின் கனவு நனவாகிறது!!- விடியுமா அவர்களின் வாழ்க்கை!!

05:06 PM Jul 14, 2018 | vasanthbalakrishnan

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில், கீழ்வலசை கிராமத்தில் 358 மலைவாழ் மக்களும், மேல்வலசை கிராமத்தில் 198 மலைவாழ் மக்களும், அக்கரப்பட்டு கிராமத்தில் 190 மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த மலைவாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயம்.

ADVERTISEMENT


இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி இதுவரை கிடையாது, மின்சார வசதி கிடையாது, நியாயவிலைக்கடை கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது, ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது, குடிதண்ணீர் வசதி கிடையாது இப்படி பல கிடையாதுகள், இதில் எது வேண்டும்மென்றாலும் சுமார் 10 கி.மீ தூரம் மலையில் இருந்து கீழே இறங்கிவர வேண்டும் என்பதால் அக்கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்மென பல ஆண்டுகளாக மனுக்களுக்கு மேல் மனுக்களை அளித்துவந்தனர்.

ADVERTISEMENT


இதுப்பற்றி, 4 ஆண்டுக்கு முன் நக்கீரன் இதழில் 3 பக்க செய்திக்கட்டுரை வந்தது. அந்த செய்தி வந்த 3வது நாளே மாவட்ட ஆட்சியராக இருந்த விஜய்பிங்ளே, அந்த கிராமத்துக்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரடியாக விசிட் அடித்து மலையில் 15 கி.மீ தூரம் நடந்து பாதை அமைக்கும் வழியை பார்வையிட்டார். மின்வசதிக்கு ஏற்பாடு செய்துதர உத்தரவிட்டார். அதன்பின் ஆட்சியராக வந்த பிரசாந்த்வடநேரே போன்றவர்கள் பல முயற்சிகளை ஏற்படுத்தி மின்வசதி செய்து தந்தனர்.


ஜீலை 13ந்தேதி, உள்செக்கடி கிராமத்திலிருந்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கீழ்வலசை கிராமத்திற்கு 6 கி.மீ. மலைப் பாதையில் நடை பயணம் மேற்கொண்டு, சாலை வசதி ஏற்படுத்துவற்கான ஆய்வு மேற்கொண்டார் கலெக்டர் கந்தசாமி. உள்செக்கடி கிராமத்தில் மூன்று மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கீழ்வலசை கிராமத்திற்கு அழைத்து சென்றார்கள். மாவட்ட ஆட்சியருடன் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவத் துறை, மகளிர் திட்டம், ஆகிய துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நடை பயணம் மேற்கொண்டார்கள்.


உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை உள்ள மலைப் பாதையில் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்டமாக வருவாய்த்துறை இடமான 1 கி.மீ. தொலைவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக சாலை அமைப்பதற்கு ரூ.29.00 இலட்சம் நிர்வாக அனுமதி வழங்கி, முதற் கட்டப்பணிகளும் இன்று கீழ்வலசை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பாதையில் 4.6 கி.மீ. வனத்துறை இடத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது, அனுமதி வழங்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இந்த சாலை அமைக்கப்படுவதால், தற்போது 90 கி.மீ. சுற்றி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, 25 கி.மீ. பயணம் மேற்கொண்டால் அருகில் உள்ள முக்கிய நகரமான தானிப்பாடிக்கு வந்து சேரலாம். இதன் மூலம் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வியாபாரம் செல்வதற்கும், தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கீழ்வலசை முதல் மேல்வலசை வரை 662 மீட்டர் தூரமும், கீழ்வலசை முதல் அக்கரப்பட்டு வரை 2.5 கி.மீ. தூரமும் வருவாய்த் துறை இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றம் ஊராட்சித் துறை மூலமாக புதிய சாலை அமைப்பதற்கு திட்டம் தயாரிக்க கூறியுள்ளார், விரைவில் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


ஆய்வின்போது மலைவாழ் மக்கள் கிணறு மற்றும் மேல்நிலை நீர் தொட்டிகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கிணற்றினை ஆழப்படுத்தியும், பலப்படுத்தியும், மேல்நிலை நீர் தொட்டிகளை சீரமைத்தும் மலை கிராமங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க உத்திரவிட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் கீழ்வலசை கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலையம், மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார். மேலும், கீழ்வலசை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பழங்கடியினர் நல ஆரம்பப் பள்ளி வளாகத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கும் திட்டம் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். மேற்கண்ட கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து ஆரம்பிக்கவும் உத்திரவிட்டார்.

இதனை தொடர்ந்து கீழ்வலசை மற்றும் மேல்வலசை கிராமங்களில் அரசு பழங்குடியினர் நல ஆரம்பப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சிகிச்சை மேற்கொண்டார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் தற்போது மாதம் ஒருமுறை நடைபெற்று வரும் சிறப்பு முகாம், இனி மேல் ஒவ்வொரு வாரமும் புகன்கிழமைகளில் நடைபெறும் என தெரிவித்தார்.


மகளிர் திட்டம் மூலமாக மூன்று கிராமங்களை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு கிராமங்களை உள்ளடக்கி ஒரு குழுவிற்கு 12 பெண்கள் வீதம் இரண்டு மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டது. மேலும், மகளிர் திட்டம் மூலம் மலை கிராமங்களைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான இலவச பயிற்சி சென்னையில் அளிப்பதற்கும், 3 ஆண்களுக்கு பணிபுரிவதற்கு தேவையான இலவச பயிற்சி அளிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் பசுமை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகளை தேர்வு செய்து மலைவாழ் மக்கள் புதிய வீடு கட்டுவதற்கான ஏதுவாக பணி ஆணைகளை விரைந்து வழங்குமாறு ஊரக வளர்ச்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.


மாவட்ட ஆட்சியர் 3 பார்வையற்ற பழங்குடியின மலைவாழ் மாற்றுத்திறனாளிகள் சுமதி, கிருஷ்ணவேணி, விஜயகுமார் ஆகியோருக்கு மாதம் ரூ.1000- உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், கீழ்வலசை கிராமத்தை சேர்ந்த சோபன், சாமிக்கண்ணு தம்பதியினரின் மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்தினாளி மகன் வினோத் என்பவருக்கு பராமரிப்பு செலவிற்கு மாதம் ரூ.1500- உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணையும், மூன்று சக்கர நாற்காலியும் வழங்கினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT