'corona' when this word disappears

Advertisment

"கரோனா..." ஆறு மாதங்களுக்கு மேலாக மனதை ஆண்டு விட்ட சொல்... வருடத்தின் முக்கால்வாசியை விழுங்கிய சொல்லும் இதுவே... எத்தனையோ பேரிடர்கள், எத்தனையோ அழிவுகள் என இந்த நிலம் சந்திக்காதது எதுவுமில்லை. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுகளில் நீண்ட காலம் மனதை ஆட்டுவித்த சொல் கரோனாவை போன்று வேறொன்றும் இல்லை...

தற்பொழுது வரை உலக அளவில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கரோனா தராசில் எடையாகக் கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்... தமிழகத்தில் 12 ஆயிரத்தை தொட காத்திருக்கிறது உயிரிழப்பு. இந்த 12 லட்சம் பேரில் கரோனாவின் வீரியம் தெரிந்தும் நம்மை காக்க களத்தில் இறங்கிய மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும்தான் அதில் 'அடக்கம்'. அதேபோல் வரலாற்றில் பள்ளிகள், கல்வி நிலையங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததும் கரோனாவிற்காகத்தான்.

 'corona' when this word disappears

Advertisment

'கரோனா' என்ற சொல் சாமானியனின் காதுகளை வந்தடைவதற்கு முன்னரே முதலில் காணாமல் போனது மெடிக்கலில் முகக்கவசமும், சானிடைசரும்தான். பின்ன, எதையுமே விட்டு வைக்காத வர்த்தக விளம்பர உலகம் இதை மட்டும் விட்டு வைக்குமா என்ன..? "அந்த பார்சலை ஏன் தொட்ட... அது எங்கெல்லாம் போயிட்டு வந்திருக்குமோ?" என அம்மா சொல்ல, "நமக்கே இவ்வளவு பாதுகாப்பு வேணும்னா டெலிவரி கொண்டுவந்த அந்த அண்ணன் இனி எங்கெல்லாம் போவாரோ?" என ஒரு சோப்பை நீட்டுகிறாள் மகள். "உனக்கு ஒரு ஸ்டடி டேபிள் செய்யலாம்னு இருக்கேன்" என கணவன் கூற, "கரோனா காலத்துல பாதுகாப்புதானே ரொம்ப முக்கியம்?" என மனைவி கூற, "இந்த பிளைவுட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து நிற்கும் ஏஜென்டுகள் இருக்கிறது" என முடிகிறது ஒரு பிளைவுட் விளம்பரம். இப்படி மொபைல் போனை சுத்தம் செய்வதற்கு தனி சானிடைசர் என எத்தனையோ விளம்பரங்களும் வந்துவிட்டன. கரோனா மட்டும்தான் விதிவிலக்கா என்ன? குஜராத் பூகம்ப பேரிடர் சமயத்தில் பல டி.எம்.டி கம்பிகள் விளம்பரங்களில் பூகம்பத்தை தாங்கி நிற்கும் வலிமை என அனிமேஷனில் பூகம்பம் புகுத்தப்பட்டது கூட நாம் பார்த்ததுதானே.

 'corona' when this word disappears

வர்த்தக விளம்பரங்களுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும், 'கரோனா' உறையில் வைக்கப்பட்ட கூர் வாள்தான். எங்களுக்கு வாக்களித்தால் கரோனா தடுப்பூசி உங்களுக்கு இலவசம் என ஒரு பக்கம் அரசியலும் கூட கரோனாவை விட்டுவைக்கவில்லை. கரோனா வெறும் நோய் என்பதால் மட்டும் அதிகம் புழக்கப்பட்ட சொல்லாக இருக்கவில்லை உயிர் பயத்திற்கும் மேலாக தனிமனித பொருளாதாரத்திலும் கைவைத்ததும்தான் காரணம். எதையுமே சாத்தியப்பட வைக்க முயற்சிக்கும் மனிதனின் உளவியலில், மகிழ்ச்சிக்கான வார்த்தைகள் நிற்பதை போல துன்பத்திற்கான வார்த்தைகளும் நிற்கத்தானே செய்யும்?

Advertisment

இதையெல்லாம் பார்க்கும் பொழுது சமூக வலைத்தளத்தில் உலாவிய பதிவு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது...

 'corona' when this word disappears

டைம் ட்ராவலர் மூலம் 2030 ஆம் ஆண்டுக்கு சென்ற ஒருவர்

என்னப்பா இன்னும் மாஸ்க் மாட்டிட்டு இருக்கீங்க இன்னும் கரோனா போகலையா? இல்ல சுவாசநோய் எதுனா பரவுதா..

இல்லையே..

அப்புறம் ஏன் மாஸ்க் போட்ருக்க கழட்டு..

அய்யோ தெய்வ குத்தமாயிடும் காலங்காலமா நம்ம முன்னோர்கள் மாஸ்க் போட்டிருக்காங்க என்றாராம் 2030 ஆம் வாசி...

அப்படி பார்த்தால் கரோனா அழிந்தாலும் அந்த வார்த்தை அழிய ஆண்டுகள் பல ஆகும்தான் போல...

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு இதுவரை 6 நாடுகளில் 43,500 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி சோதிக்கப்பட்டதில் கரோனா முதல் தடுப்பு மருந்து 90 சதவீத மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டதாக தெரிந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் ரஷ்யா முனைப்புக்காட்டி வரும் நிலையில் Pfizer நிறுவனம் தங்களின் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டவர்களில் இதுவரை பாதுகாப்பு பிரச்சனை இல்லை எனவும், நோய் தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளது. எனவே என்றோ ஒரு நாள் கரோனா என்ற சொல் நம் மனங்களில் இருந்து மறைந்து போகும் அளவிற்கு 'கைகழுவப்படும்' என நம்புவோம்.