ADVERTISEMENT

தெருக்கூத்தில் கலக்கும் சிறுவன்; ஆச்சரியத்தோடு சிரித்து மகிழும் மக்கள்

03:41 PM Aug 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்றைய இளைஞர்கள் முதல் சிறார்கள் வரை எல்லோரும் கிரிக்கெட், மொபைல் கேம், டிவி ஷோக்கள் பின்னால் ஓடுகிறார்கள். 11 வயதேயான சிறுவன் தெருக்கூத்தில் அரிதாரம்பூசி, மன்னர் கால உடை உடுத்தி இதோ வந்தேன்டா என கையில் கத்தியுடன் மக்கள் முன் வந்து நின்று பம்பரம் போல் சுற்றி சுற்றி ஆடுவதும், பாடுவதையும் காணும் ஒவ்வொருவரும் ஆச்சர்யமாகிப் போகிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர்களுக்கு உடல் பலம், டைமிங் சென்ஸ், டயலாக் டெலிவரி, நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவை மிகவும் முக்கியம். இதையெல்லாம்விட கலைஞனின் குரல் முக்கியம். தெருக்கூத்தை ரசிக்கும் கிராமத்து முதியவர்கள், எளிமையான மக்களுக்கு கதை நன்றாக தெரியும். சொதப்பினால் ஏச்சுக்கு ஆளாவார்கள். அவற்றை மனதில் நிறுத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் முன் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதியவைப்பது என்பது கலைஞர்களுக்கு பெரும் சவாலானது. அந்த சாவல் எல்லாம் எனக்கு சர்க்கரை பொங்கல் என்கிறான் சிறுவன் தமிழ்செல்வன்.

திருவண்ணாமலை, அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தெருக்கூத்து நாடக ஆசிரியர்கள் முத்துச்சாமி, கிருஷ்ணன். 40 ஆண்டுகளாக தெருக்கூத்து நடிகராகவும், ஆசிரியர்களாகவும் இருந்துவருகிறார்கள். அதில் முத்துச்சாமி என்கிற மொட்டையனின் மகள் வழிப்பேரன் தமிழ்செல்வன். 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் அப்பா ராஜேஷ் தினக்கூலி வேலை செய்கிறார். அம்மா பார்வதி டைலராக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் படிக்கவைக்கவே சிரமப்பட்டுள்ளனர். இதனால் முத்துச்சாமி, பேரன் தமிழ்செல்வன் மற்றும் பேத்தியை அழைத்துவந்து தானே வளர்த்துவருகிறார். தாத்தா நடத்தும் தெருக்கூத்து நாடகங்களை பார்த்து ரசித்த தமிழ்செல்வனுக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரவில் கண்விழித்து பார்க்கும் தெருக்கூத்துகளில் அதில் நடிக்கும் கலைஞர்களின் உடல்மொழி, நடனம், பாடல்பாடும் விததத்தை உள்வாங்கிக்கொண்டு மறுநாள் தங்களது நிலத்தில், பள்ளி வகுப்பறையில் பாடியும், ஆடியும் பயிற்சி பெற்றுள்ளான். அவனின் ஆசையைப் பார்த்த சக நாடக கலைஞர்கள் ஆச்சர்யமாகி சிலமாதங்களுக்கு முன்பு தங்களது கிராமத்தில் நடந்த நாடகத்தில் முதன்முதலாக பரிட்சார்த்த முறையில் சவாலான வாதாபி கதாபாத்திரத்துக்கு அரிதாரம்பூசி நடிக்கவைத்துள்ளார்கள். சிறுவனின் நடனவேகம், டயலாக் டெலிவரியை கண்டு ஆச்சர்யமானவர்கள் அவனின் சில தவறுகளை திருத்தி வெளியூரில் நடக்கும் நாடகங்களுக்கு அழைத்து செல்ல துவங்கினர். தற்போதுவரை 12 இடங்களில் நடந்த தெருக் கூத்துகளில் நடித்துள்ளான்.

நள்ளிரவு 12 மணிக்கு மகாபாரதத்தில் கவுரவர்களின் தலைவனான துரியோதனின் 99 தம்பிகளில் கடைசி தம்பியான விகூர்ணன் பாத்திரத்தில் நடிக்க அரிதாரம் பூசிக்கொண்டிருந்தான் தமிழ்செல்வன். நாடக நடிகருக்கு மக்கள் மத்தியில் நடிப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அரிதாரம் பூசுவது, உடை உடுத்துவது. நன்றாக நடிக்கும் நடிகருக்கே அரிதாரம் பூசுவது என்பது சவாலானது என்கிறார்கள் சககலைஞர்கள்.

11 வயதில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தானே கலர் தயார் செய்து முகத்தில் பூசிக்கொள்ள துவங்கிய தமிழ்செல்வனிடம் நாம் பேசியபோது, “தாத்தா கூட நாடகம் பார்க்கப்போவேன். அவர் சொல்லித்தர்றதயும், சககலைஞர்கள் ஆடுவதையும், பாடுவதையும் பார்த்து நாமும் அப்படி நடிக்கனும்னு கத்துக்கிட்டன். எங்க நாடக குழுவில் இருக்குறவங்க சப்போட் செய்தாங்க. இப்போ 10 நாடகத்துக்கு மேல நடிச்சிட்டேன். இரவில் வேஷம் கட்டுவன், பகல்ல ஸ்கூல் போவன். நடிச்சி முடிச்சதும் மக்கள் எல்லோரும் கைதட்டி பாராட்டி, நல்லா நடிச்சன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. இதில் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, கத்துக்குவன்” என அளவாகவே பேசினார் சிறுவர் தமிழ்ச்செல்வன்.

அரிதாரம்பூசி மக்கள் முன்வந்து நின்ற சிறுவனின் திறமையை கண்டு மக்கள் ஆச்சர்யமானார்கள். சூரன் வேடம் கட்டுபவர்கள், முட்டிப்போட்டு நாடக மைதானத்தை வலம் வரவேண்டும். காற்றை கிழித்துக்கொண்டு சுற்றுவதுப்போல் சுற்றினான். சிறுவனின் நடனமும், நூற்றுக்கணக்கான மேடைகள் கண்ட சகநடிகர்களுக்கு ஈக்வலாக விடிய விடிய நடித்து பாராட்டைபெற்றான். அவனின் நடிப்பை பார்த்து மக்கள் கைதட்டி ரசித்து, ஊக்குவித்தபடியே இருந்தனர்.


படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT