Skip to main content

இரண்டடி திருக்குறளை ஓவியமாக்கும் சாதனை பெண் ‘செளமியா’

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 ARTIST SOWMIYA | THIRUKURAL | PAINTING |

 

ஓவியம் மீதான ஆர்வம் வருவதற்கான காரணம் என் நினைவில் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஓவியம் வரைவேன். நோட்டுப்புத்தகத்தில் கூட ஓவியங்களே அதிகம் தென்படும். ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்கு ஓவியம் எப்படி உதவும் என தோன்றியது. அப்போது தனியார் நிறுவனத்தில் விஷுவல் மீடியா டிப்ளோமா படிப்பில் சேர்ந்தேன். இதற்கு முன் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்திருப்பேன். எந்த ஒன்றில் கவனம் செலுத்துவது. எந்தெந்த வடிவங்களில் ஓவியம் வரையப்படுகிறது என்பது பற்றிய பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதற்குப் பிறகு ஓவியங்களில் இருக்கும் வகைகள் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு பயிற்சி பெற்ற பிறகு வல்லுநராக உருப்பெற்றேன். 

 

எந்தவொரு ஓவியம் வரையும் பொழுதும் சிரமத்தை உணர்ந்ததில்லை. மாறாக அது மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது. இன்றோடு 1318 வது நாளாக நான் தொடர்ந்து வரைந்து வருகிறேன். இதில் இத்தனை சவால்கள் இருந்தாலும் முற்றிலும் இந்தப் பயணம் சந்தோசமாக தான் இருந்துள்ளது. முதுகலைப் பட்டமும் படித்து விட்டு, தற்போது ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்யலாம் என சிந்தித்தேன். நமக்கு தெரிந்த ஓவியத்தை குறித்தே ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். நாலுவரி கவிதைகளை வைத்து ஓவியமாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்து சில ஆய்வுகள் இருக்கின்றன. அதேபோல், தமிழிலும் அதிகளவு சிறந்த இலக்கியங்கள் இருப்பதனால் இதனைத் தெரிவு செய்தேன்.

 

தமிழ் இலக்கியம் என முடிவு செய்த பின், முதலில் நினைவிற்கு வந்தது திருக்குறள். தமிழ் மொழியை கடந்து அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறாக இருந்தது, எந்த மாதிரி சூழ்நிலைகளில் வாழ்ந்தோம், இப்பொழுது தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் போன்ற கேள்விகள் எழும். விட்டலாச்சாரியா, வரலாற்றுப் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் அதிகம் உண்டு. ராஜாக்கள் காலத்து கதைகள் மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியதாக இருந்தது. காலங்கள் செல்ல இதுபோன்ற படங்களின் வரவு குறையத் தொடங்கியது. ரசிகர்களின் மனதைக் கவரக் கூடிய படங்கள் அவர்களின் மரபு சார்ந்து எடுக்கப்படுபவையாக பெரும்பாலும் உள்ளது. மேலும் அவை அவர்களிடத்தில் ஆர்வத்தை உருவாக்கும். 

 

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை பரீட்சயமான திருக்குறளில் இருந்து ஓவியத்தை துவங்கலாம் என முடிவெடுத்தேன். ஓவியம் வரைய ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. முதல் நூறு நாட்களில் நேரம் தவறாமையைக் கற்றுக்கொண்டேன். அடுத்து, சிறிய அளவிலான தாளில் வரையத் தொடங்கி பின்பு பெரிய தாளுக்கு மாறினேன். வரையும் பொழுது சில யுக்திகளைக் கையாண்டு, யதார்த்தவாதம், உருவக முறைகளை பயன்படுத்தினேன். மக்களுக்கு பழமொழிகளைப் போல எளிமையில் எடுத்துரைக்க, அவர்களுக்கு நல்லது - கெட்டது எனத் தோன்றும் விசயங்களை வைத்து வரைந்தேன்.. இவ்வளவு நாட்களை கடந்தும் இன்றும் வரைதலின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.
 

 

 

Next Story

சங்க இலக்கிய ஓவியப் போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு "சங்க இலக்கிய ஓவியப் போட்டியை" தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

 

இப்போட்டியில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் www.tamllvu.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவர்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து பத்து நாட்களுக்குள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு 27-11-2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

 

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 09-12-2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்குத் தலா ரூ.2000  ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என மூன்று பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.9,000 வழங்கப்படும்.

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25, என்ற  முகவரியிலோ, 044-2220 9400, +91 86678 22210 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி அறிவிப்பு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Painting competition announcement for school students 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இதில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (08.09.2023) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓவியப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி  (09.09.2023) அன்று  காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

 

4,5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு இயற்கை காட்சிகளுடன் தமிழக நினைவுச் சின்னம் அல்லது அருங்காட்சியக அரும் பொருட்கள் ஏதாவது ஒன்றின் ஓவியம். 7,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கான தலைப்பு நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லது திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) 10.11 மற்றும் 12 தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியகத் தொடர்பு குரல் ஓவியம் அல்லது  திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்) தலைப்பாக வழங்கப்படும்.

 

ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஓவியம் வரைவதற்கான ஓவியத்தாள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான பென்சில்கள், வண்ணங்கள் மற்றும் இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். மாணவர்கள் உடன் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வயதிற்கான அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். ஓவியம் வரையும்போது செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும் நூறு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு  04428193238, 9443526604 மற்றும் 9489228435 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் govtmuse@tn.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.